ஒன்றிய அரசு பணிகளில் தமிழ்நாட்டில் 100 சதவீதம் தமிழர்களையே பணியமர்த்த வேண்டும்-தமிழர் விடுதலை களம் செயற்குழுவில் வலியுறுத்தல்

நெல்லை : தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பணிகளில் 100 சதவீதம் தமிழர்களையே பணியமர்த்த வேண்டும் என நெல்லையில் நடந்த தமிழர் விடுதலைக் களம் அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழர் விடுதலை களம் அமைப்பின் மாநில அளவிலான அமைப்பு சாரா தொழிலாளர் நலசங்க அறிமுகவிழா, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு மற்றும் செயற்குழு கூட்டம் நெல்லை ஸ்ரீனிவாசநகரில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு அமைப்பின் நிறுவன தலைவரும், வழக்கறிஞருமான ராஜ்குமார் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க நெல்லை மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாநில துணை தலைவர் சாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர், தென்மண்டல அமைப்பு செயலாளர் வெள்ளபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  செயற்குழுவில், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பணிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களை பணியமர்த்துவதை உடனடியாக தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டில் தனியார், ஒன்றிய அரசு பணிகளில் 100 சதவீதம் தமிழர்களையே பணியமர்த்த வேண்டும்.

தேவேந்திரகுல வேளாளர்களை தனி இட ஒதுக்கீட்டுடன்கூடிய (எஸ்சி) பட்டியலிலிருந்து மாற்றம் செய்ய வேண்டும். தியாகி இம்மானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வரவேற்கிறோம். இஸ்லாமியர் உள்பட 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை தமிழக அரசு நன்னடத்தைபடி உடனே விடுதலை செய்ய வேண்டும். தமிழக மக்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

நெற்கட்டும்செவல் பாளையத்தில் மன்னர் புலித்தேவனின் தளபதி வென்னிகாலாடிக்கு சிலையுடன்கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும். தஞ்சை பெருவுடையார் கோவிலில் அகற்றப்பட்ட இந்திரன் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முறையே நெல்லை மாநகர் வண்ணைமுருகன், நெல்லை முத்துக்குமார், நெல்லை கிழக்கு மணிபாண்டியன், தூத்துக்குடி காளி, தூத்துக்குடி தெற்கு சங்கர், தென்காசி சுரேஷ், நெல்லை மாவட்ட தலைவர் சுரேஷ், ஆட்டோ சங்க புஷ்பலதா ஸ்டாண்டு கிளை தலைவர் முருகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆட்டோ சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் ஜோசப் நன்றி கூறினார்.

Related Stories: