×

வேலூர் மீன் மார்க்கெட்டில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு

வேலூர் : வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் மீன்கள் விலை சற்று உயர்ந்துள்ளதாகவும், மேலும் கார்த்திகை மாதம் என்பதால் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 70 முதல் 100 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன்கள் விலை கடந்த வாரத்தை விட சற்று அதிகமாக உள்ளது. வரத்து குறைந்ததால் இந்த விலை அதிகரித்துள்ளது. மேலும் கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல விரதம் தொடங்கி உள்ளதால் விற்பனையும் குறைந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:கடந்த வாரத்தைவிட மீன்கள் வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் 10 லோடு மீன் வந்தது. இந்த வாரம் 7 லோடுகள் மட்டுமே வந்தது. இதனால் விலையும் சற்று உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ₹1,000 முதல் ₹1,200 வரையும், இறால் கிலோ ₹400 முதல் ₹450 வரையும், நண்டு கிலோ ₹450 முதல் ₹500 வரையும் விற்றது. சங்கரா கிலோ ₹350 முதல் ₹400 வரையும், மத்தி ₹200, கடல் வவ்வால் கிலோ ₹650 முதல் ₹700 வரையும், ஏரி, குளங்களில் வளரும் வவ்வால் கிலோ ₹150 முதல் ₹180 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல விரதம் இருப்பதால் விற்பனையும் சரிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Vellore , Vellore: Fish prices have gone up a bit due to reduced supply to Vellore fish market and sales due to the month of Karthikai.
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...