வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 3,795 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 3,795 பாசன ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயல்பான அளவை தாண்டி மழை பதிவாகியுள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224.297 டி.எம்.சி. அதில் நவ.27ம் தேதி நிலவரப்படி 197.001 டி.எம்.சி. கொள்ளளவை எட்டியுள்ளது.

அதாவது 87.83 சதவீதம் நீர்தேக்கங்களின் நீர் நிரம்பியுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் 14,139 பாசன ஏரிகள் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 3,795 ஏரிகள் முழுகொள்ளளவான 100 சதவீதம் நிரம்பிவிட்டன. இவற்றில் இதுவரை 2,611 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 3,158 ஏரிகள் 51 முதல் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசன ஏரிகளில் 889 ஏரிகள் நிரம்பின. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 641 ஏரிகளில் 329 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 697 ஏரிகளில் 294 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளன. அதேபோல் 108 ஏரிகள் வறண்டு உள்ளன.

மேலும், தமிழகத்தில் உள்ள அணைகளான தேர்வாய் கண்டிகை, மோர்தானா உள்ளிட்ட 13 அணைகள் 100% நிரம்பிவிட்டன. இதில், 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை 119.38 அடியை எட்டியுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி 89.64 அடி நிரம்பி உள்ளது. 105 அடி கொண்ட பவானிசாகர் அணை 103.74 அடி நிரம்பியுள்ளது. அதேபோல், பாலாறு, ஆழியாறு, வைகை உள்ளிட்ட அணைகள் 90% மேல் நிரம்பியுள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஆகிய 6 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 13.213 டிஎம்சி. இதில் தற்போது 70 சதவீதம் மேல் நீர் நிரம்பியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மொத்த சிறிய மற்றும் பெரிய அணைகளின் மொத்த கொள்ளளவு 2,24,297 மில்லியன் கன அடியாகும். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் அணைகளில் ஒரு 1,97,001 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்யிருப்பு சதவீதத்தை பார்க்கும் போது 87.83 சதவீதமாகும். இதனால் வருகிற கோடைக்காலத்தில் மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் கடந்தாண்டை விட பருவமழை தொடங்கிய ஒரே மாதத்திற்குள் 50 சதவீதத்திற்கு அணைகள் நிரம்பியுள்ளன. இவ்வாறு நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: