×

வடசென்னை பகுதியில் புதிய ரேஷன் கார்டு பெற அலைகழிக்கப்படும் மக்கள்; மகன், மகளின் கார்டில் பெயரை சேர்க்கும்படி தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு கெடுபிடி

தண்டையார்பேட்டை: தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தமிழகம் முழுவதும் அமுதம் ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி, கோதுமை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதுதவிர பனை வெல்லம், டீ தூள் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. வடசென்னையில் அமுதம் ரேஷன் கடைகள், நாம் கோ கூட்டுறவு பண்டகசாலை, வண்ணாரப்பேட்டை கூட்டுறவு பண்டக சாலை, பாரதியார் கூட்டுறவு பண்டக சாலை, தண்டையார் கூட்டுறவு பண்டகசாலை என வடசென்னை முழுவதும் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது உதவி ஆணையரின் பணியாகும். ஆனால், தற்போது ஆர்.கே.நகருக்கு புதிதாக வந்துள்ள உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஊழியர்களும் பொதுமக்களும் கூறி வருகிறார்கள். குறிப்பாக, புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அதேபோல், தனியாக வசிக்கும் முதியோர் ரேஷன் கார்டு வைத்திருந்தாலும் அவர்களிடம், உங்களது மகனோ, மகளிடமோ உள்ள கார்டில் உங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளுங்கள். தனியாக ரேஷன் கார்டு வழங்கப்படாது என்று கூறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பெரும்பாலும் கோதுமை வழங்கப்படுவதில்லை. தரமான அரிசி இருந்தால் அதனை கள்ளச்சந்தையில் விற்க பதுக்கி விடுகின்றனர். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய உதவி ஆணையரோ கண்டும் காணாமல் இருப்பதால் தொடர்ந்து இதுபோன்ற பிரச்னைகள் ஆர்.கே.நகர் பகுதியில் நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நுகர்வோர் பாதிக்கப்படாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும். தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 1வது தெருவில் இரண்டு அமுதம் ரேஷன் கடைகள் அரசு இடத்தில் நடத்தப்பட்டு வந்தன. அந்த கடைகள் பழுது காரணமாக மாற்றப்பட்டு இரண்டு ரேஷன் கடைகளும் 20 ஆயிரத்துக்கு மேல் வாடகைக்கு நெடுஞ்செழியன் நகரில் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு கடைகளிலும் மொத்தம் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர். இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக ரேஷன் கடை அமைத்தால் பொதுமக்கள் எளிதில் வந்து வாங்கி செல்லலாம். அரசுக்கும் வாடகை செலுத்துவது மிச்சமாகும். இதையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. தற்போது, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், உணவு பொருள் வழங்கல் ஆணையரும் அதிரடி சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் வடசென்னை பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி கிடைக்கும்.

கள்ளச்சந்தையில் அரிசி விற்பதும் தடுக்கப்படும். இதுதவிர, பொதுமக்கள் எளிதில் புதிதாக ரேஷன் கார்டு வாங்குவதற்கும், தனியாக வசிக்கும் முதியோர் சிரமமின்றி பொருட்கள் வாங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உதவி ஆணையர் அலுவலகம் செயல்படுகிறது. உணவுப் பொருள் வழங்கல் துறையில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வது உதவி ஆணையரின் வேலை. ஆனால், ஒரு சில உதவி  ஆணையர்கள் பொதுமக்கள் பிரச்னையை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு வர வேண்டியது வந்தால் போதும் என்று செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வடசென்னை முழுவதும் செயல்படும் ரேஷன் கடைகளில் துறை ரீதியாக உதவி ஆணையர் திடீர் ஆய்வு செய்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இல்லையென்றால் தொடர்ந்து இதுபோன்ற குளறுபடிகளை சந்திக்க வேண்டிய நிலைதான் என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.



Tags : North Chennai , In North Chennai, people are flocking to get new ration cards; Ask elderly people living alone to add their son's and daughter's name to their card
× RELATED வடசென்னை பாஜ வேட்பாளர்...