அரசு பள்ளி மாணவி அசத்தல், யோகாவில் 3 உலக சாதனை; பொது மக்கள் பாராட்டு

நாகராஜகண்டிகை அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியை எடுத்து கொண்டால் சாதனைக்கு பஞ்சமே இல்லை என்று கூறும் அளவுக்கு மாணவ, மாணவிகள் சிறு வயதில் இருந்தே கலக்கி வருகின்றனர். ேதசிய அளவில் மட்டும் அல்லாமல் உலக அளவிலும் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்குகின்றனர். குறிப்பாக, தமிழில் ஆர்வம், படிப்பை தவிர விளையாட்டு, யோகா, சிலம்பம், யோகாசனம் போன்றவற்றில் கலக்கி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜகண்டிகை கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 66 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்த பல மாணவர்கள் தற்போது டாக்டர், இன்ஜினியர், செவிலியர், டெக்னீஷியன், மென்பொருள் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் சிறந்து விளங்குகின்றனர். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த பிரபு - வினோதினி தம்பதியரின் மகள் பி.ஹேமஸ்ரீ  (7) இந்த தொடக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவர், சிறு வயது முதல் நாகராஜ் கண்டிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிலம்பம் யோகா உள்ளிட்ட  பகுதிகளில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதில், அதிக அளவில் யோகா பயிற்சி மீது விருப்பம் கொண்ட ஹேமஸ்ரீ, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் யோகா போட்டிகளை பார்ப்பது வழக்கம். பின்னர், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ  சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில், மூன்று ஆண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வந்தார். இவர், வீடியோ கான்பரன்சிங் மூலம் பூர்ண கபோடாசனம் எனும் ஆசனத்தில் நின்றபடி, 78 முறை கழுத்துடன் இரு கால்களை இணைத்து புதிய உலக சாதனை படைத்தார். இவரது சாதனை, ‘வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‘அசிஸ்ட் உலக சாதனை’, ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. சாதனை படைத்த மாணவி ஹேமஸ்ரீ , யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை, நாகராஜகண்டிகை கிராம மக்கள் பாராட்டினர்.

Related Stories: