×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது; அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, நேற்று அதிகாலை சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடந்தன. அதைத்தொடர்ந்து, காலை 6 மணியளவில் அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள 63 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டனர். கொடியேற்றத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலையே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

விழாவில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், கோயில் இணை ஆணையர் அசோக்குமார், டிஆர்ஓ பிரியதர்ஷினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெற உள்ளது. தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி மாட வீதியுலா நடைபெறும். வரும் 2ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 3ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெறும். விழாவின் நிறைவாக, வரும் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,688 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்காக, 4,500 கிலோ நெய், கொப்பரை, ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை பயன்படுத்தப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, தீபத்திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதால், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 2,700 சிறப்பு பஸ்கள், 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தீபத்திருவிழாவை காண பக்தர்கள் அதிகளவில் வருவதால், திருவண்ணாமலை நகரமே விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

Tags : Karthikai Deepatri Festival ,Tiruvannamalai Annamalaiyar Temple , Karthikai Deepatri Festival at Tiruvannamalai Annamalaiyar Temple started with flag hoisting; Thousands of devotees visit early in the morning
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை...