மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டத்தை மீறினால் வாக்குரிமையை பறிக்க வேண்டும்; ஒன்றிய அமைச்சர் அதிரடி

புதுடெல்லி: ‘மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்தை மீறுவோரின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்’ என ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசி உள்ளார். ஐநாவின் உலக மக்கள்தொகை கணிப்பின்படி, அடுத்த ஆண்டில் இந்தியா, சீனாவை பின்னுக்கு தள்ளி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறிவிடும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும் என ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார்.  அவர் அளித்த பேட்டியில், ‘‘மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா மிகவும் முக்கியமானது. ஏனெனில் நம்மிடம் குறைவான வளங்களே உள்ளன.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக ‘ஒரு குழந்தை கொள்கையை’ சீனா அமல்படுத்தியது. இதன் மூலம் அவர்கள் வளர்ச்சி அடைந்து உள்ளனர். சீனாவில் நிமிடத்திற்கு 10 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் பிறக்கின்றன. நாம் எப்படி சீனாவுடன் போட்டியிடுவோம்? எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான சட்டத்தை எந்த மதமும் பாரபட்சமின்றி அனைத்து மக்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை பின்பற்றாதவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க கூடாது. அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: