தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்து சேவையால் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு: மாநில திட்டக்குழு ஆய்வில் தகவல்

சென்னை: தமிழக அரசின் கட்டணமில்லா இலவச பேருந்து சேவையால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.888 சேமிப்பு கிடைத்துள்ளதாக மாநில திட்டக்குழு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.  தமிழக போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண சேவை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து மாநில திட்டக்குழு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் விவசாய பகுதியான நாகப்பட்டினம், தொழில்வள பகுதியான திருப்பூர், வர்த்தக பகுதியான மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த ஆக.4ம் தேதி முதல் 30ம் தேதி வரை கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, இந்த ஆய்வில் அரசின் இலவச பேருந்துகளில் பயணம் மேற்கொண்டோரில் 50% மேற்பட்டோர் 40 வயதை கடந்த பெண்கள் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

மேலும், பயணத்துக்காக குடும்ப உறுப்பினர்களை சார்ந்திருக்கும் நிலையில் மாற்றம் வந்திருக்கிறதா அல்லது அதிகாரம் அளிப்பது மற்றும் கண்ணியம் போன்ற அம்சங்களில் இலவச பேருந்து பயண திட்டம் ஏதேனும் பங்களிப்பு செய்கிறதா உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதில் அளித்துள்ள பெண்கள் மாத சேமிப்பில் சராசரியாக ₹888 என்ற அளவில் சேமிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இலவச பேருந்துகளால் பெண்களுக்கு மாதந்தோறும் பண ரீதியிலான சேமிப்புகள் கிடைத்தாலும், பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்ற கருத்தும் ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல், பேருந்துகளை அடிக்கடி இயக்க வேண்டும் எனவும் பலர் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அதன் அடிப்படையில், இலவச பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு ஏதுவாக தமிழக அரசு மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: