×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை: வைகை அணை நீர்மட்டம் சரிவு

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், வைகை அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம், இந்தாண்டில் இரு முறை முழுக்கொள்ளளவை எட்டியது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததால் அணை நீர்மட்டம் கடந்த 3 மாதங்களாக குறையவே இல்லை.

இதன்காரணமாக வைகை அணையில் இருந்து முதல்போகம், ஒருபோகம், 58ம் கால்வாய் மற்றும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் அதிகமான நீர்வரத்தால் உபரிநீரும் ஆற்றில் திறக்கப்பட்டது. வடகிழக்குப்பருவமழை தொடங்கி ஒருமாதம் ஆகியும் தேனி மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. குறிப்பாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்தது.

இதனால் கடந்த 3 மாதங்களாக முழுகொள்ளளவில் நீடித்து வந்த அணை நீர்மட்டம் வேகமாக சரிந்துள்ளது. அணை நீர்மட்டம் தற்போது 67 அடியாக குறைந்துள்ளதால் உசிலம்பட்டி பகுதி மக்களின் தேவைக்காக 58ம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலைடைந்துள்ளனர்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 67.26 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 1,719 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 5,147 மில்லியன் கனஅடியாக இருந்தது.



Tags : Waikai Dam , Catchment Area, No Rainfall, Vaigai Dam, Water Level, Slope
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்படும்...