×

நாங்குநேரியில் தயாராகும் கார்த்திகை தீப விளக்குகள்: மண் கிடைக்காததால் தொழிலாளர்கள் அவதி

களக்காடு: நாங்குநேரியில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு விளக்குகள் தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. ஆனால் இதற்கு போதிய மண் கிடைக்காததால் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வீடுகளில் புதிய விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவது ஐதீகமாகும். சிவபெருமான் அக்னி பிளம்பாய் தோன்றியதை நினைவுபடுத்தும் வகையில் அன்றைய தினம் கோயில்களில் சொக்கப்பனைகளும் கொளுத்தப்படும்.

இந்தாண்டு திருக்கார்த்திகை தீபத்திருநாள், வரும் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருவிளக்குகள் தயார் செய்யும் பணி மும்முரமடைந்துள்ளன. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே இறப்புவாரி பஞ்சாயத்துக்குட்பட்ட மாவடியிலும் மண்ணால் ஆன விளக்குகள் தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. இங்குள்ள  மண் பானை தொழிலாளர்கள் மண்பாண்ட தொழிலை நம்பி தான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் ஊருக்கு அருகில் ஓடும் நம்பியாற்று தண்ணீரை வைத்து சிறிய மண் விளக்குகளை பல்வேறு ரகங்களில், கலைநயமிக்க வகையில் வடிவமைத்து வருகின்றனர்.

இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. விளக்கு தயாரிக்கும் பணிக்கு தேவையான குளத்து மண் கிடைக்காததால் தொழிலாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாவடியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி ஆறுமுகம் கூறுகையில், ‘கடந்த சில வருடங்களாக அரசு குளங்களில் மண் எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. மண் கிடைக்காமல் திருவிளக்கு உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த தொழிலில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. அரசு அறிவித்த நிவாரணம் மற்றும் சலுகைகள் கூட கிடைக்கவில்லை. எனவே மண்பாண்ட தொழிலுக்கு குளங்களில் மண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.


Tags : Nanguneri , Preparation of Karthika Deepa Lamps in Nanguneri: Workers suffering due to non-availability of soil
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...