×

தூத்துக்குடி - நாகை இடையே 332 கிலோ மீட்டருக்கு ரூ.9 ஆயிரம் கோடியில் புதிதாக 4 வழிச்சாலை: தேசிய நெடுஞ்சாலை திட்ட செயலாக்க இயக்குநர் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி- நாகை இடையே 332 கிலோ மீட்டருக்கு ரூ.9 ஆயிரம் கோடியில் புதிதாக 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை திட்ட செயலாக்க இயக்குநர் ராவுத் தெரிவித்தார். தூத்துக்குடி இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குநர் ராவுத் பங்கேற்று பேசியதாவது:

தூத்துக்குடி துறைமுகம் முதல் கலெக்டர் அலுவலகம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி- மதுரை 4 வழிச்சாலையில் மீளவிட்டான் ரயில்வே மேம்பாலம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும். இதேபோல் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள், வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். தூத்துக்குடி- நெல்லை 4 வழிச்சாலையில் புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் மேம்பாலப் பணிகள், இன்னும் 2 மாதத்தில் முடிக்கப்படும்.

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை சரி செய்யும் பணி ரூ.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இப்பணிகள் அனைத்தும் விரைவாக முடிக்கப்படும். தூத்துக்குடி- நாகை இடையே 332 கிலோ மீட்டருக்கு ரூ.9 ஆயிரம் கோடியில் புதிதாக 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணியானது அரசின் ஒப்புதலை பெறப்பட்டு செயல்படுத்தப்படும்.

இதன் மூலமாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். மேலும் இந்த சாலை சென்னைக்கு ஒரு மாற்று வழிச்சாலையாக அமையும், என்றார். இதில் இந்திய தொழில் வர்த்தக சங்க செயலாளர் கோடீஸ்வரன், பொருளாளர் தர்மராஜ், தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர் கலைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Tuticorin-Nagai ,National Highway Project , 332 km between Thoothukudi-Nagai at a cost of Rs 9000 crore and a new 4-lane road: Information from the National Highway Project Implementation Director
× RELATED பண்ருட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை...