×

தமிழ்நாடு, கேரளாவில் ஆளுநர்களை வைத்து பாஜ போட்டி, அரசாங்கம் நடத்த நினைப்பது ஜனநாயக விரோதம்: முத்தரசன் குற்றச்சாட்டு

கும்பகோணம்: ஆளுநர்களை வைத்து பாஜ போட்டி  அரசாங்கம் நடத்த நினைப்பது ஜனநாயக விரோதம் என்று இந்திய கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார். தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்தில் அவர்  நேற்று அளித்த பேட்டி: அரசியல்  சட்டம், அரசியல் சட்டத்தை உருவாக்கும் அமைப்புகளை சீர்குலைக்கும் அல்லது  எதிர்த்து செயல்படுகின்ற போக்கை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது என்பது,  உச்சநீதிமன்றம், தேர்தல் அதிகாரி குறித்து  கேள்வி எழுப்பி இருப்பதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை,  ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம்  வரவு வைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஒன்றிய அரசு  நிறைவேற்றவில்லை.

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாடு,  கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை தவறாக பயன்படுத்தியும், ஆளுநர்  மூலமாகவே அங்கு ஆட்சி செய்யும் அரசாங்கத்திற்கு ஒரு போட்டி  அரசாங்கத்தையும் ஏற்படுத்துகிற மிக மோசமான ஜனநாயக விரோத கொள்கையை பாஜ  பின்பற்றுகிறது. மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராகவும், பல்வேறு  சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பேசி வரும்  ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29ம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Kerala ,BJP ,Mutharasan , In Tamil Nadu, Kerala, BJP's intention to hold a contest with governors is anti-democratic: Mutharasan alleges
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...