மேட்டூர் அருகே பரபரப்பு; இந்தி திணிப்பை எதிர்த்து திமுக தொண்டர் தீக்குளித்து சாவு

மேட்டூர்: மேட்டூர் அருகே இந்தி திணிப்பை எதிர்த்து, திமுக தொண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல் கூறினார். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த பி.என்.பட்டி பேரூராட்சி 18வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்(85) விவசாயி. இவர் நங்கவள்ளி ஒன்றிய திமுக முன்னாள் விவசாய அணி அமைப்பாளர். இவரது மனைவி ஜானகி (80). இவருக்கு மணி (58), ரத்னவேல் (55) என்ற மகன்களும், கல்யாணி (57) என்ற மகளும் உள்ளனர். திமுக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே, கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு, முன்னாள் முதல்வர் கலைஞர் கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில்,  ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ளதால், மன உளைச்சலில் இருந்தார்.  நேற்று பி.என்.பட்டி பேரூராட்சி திமுக அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பிளாஸ்டிக் கேனில் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை, உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துக்கொண்டார். இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என கோஷமிட்ட தங்கவேல், அதே இடத்தில் உடல் கருகி உயிழந்தார்.

அவர் வைத்திருந்த தாளில், ‘குடியரசு தலைவர் அவர்களே, இந்தியை திணிக்க தயவு செய்து அனுமதி வழங்காதீர்கள், மோடி அரசே, ஒன்றிய அரசே இந்தியை திணிக்காதே, இந்தி வேண்டாம், தாய்மொழி தமிழ் இருக்க இந்தி கோணமான எழுத்து, கோமாளி எழுத்து, மாணவ-மாணவிகள் வாயில் நுழையாது. வேலை வாய்ப்பை பாதிக்கும் இந்தி ஒழிக, தமிழ் வாழ்க’ என எழுதி கீழே அவரது பெயரை எழுதியிருந்தார். இதனிடையே, பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்  எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள், தங்கவேல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியை, தங்கவேலின் மனைவி ஜானகியிடம், அமைச்சர் கணேசன் வழங்கினார்.

Related Stories: