சத்தியமூர்த்திபவன் மோதல் விவகாரம்; கே.ஆர்.ராமசாமி, எம்எல்ஏக்கள் கே.சி.வேணுகோபாலுடன் சந்திப்பு: டெல்லி மேலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

சென்னை: சென்னை சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதல் விவகாரத்தில் அதிரடி திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து டெல்லிக்கு சென்று மேலிட தலைவர்களிடம் கே.எஸ்.அழகிரி மீது புகார் செய்தனர். இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராகாத காரணத்தால், ரூபி மனோகரன் எம்எல்ஏவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து குழு உத்தரவிட்டது. அவர் உரிய முறையில் கடிதம் அனுப்பி 15 நாள் கால அவகாசம் கேட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்தாமல் சஸ்பெண்ட் செய்தது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி தலைமையிடம் புகார் செய்தனர். இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி மீது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ரூபி மனோகரன் மீதான இடை நீக்கத்தை நிறுத்தி வைத்து அறிவிப்பு வெளியிட்டார். நாளுக்கு நாள் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதால் டெல்லி மேலிடம் தங்கள் கையில் எடுத்தது. இதையடுத்து, மோதல் தொடர்பான விவகாரத்தில், மேலிட பரிந்துரை இல்லாமல் தமிழக காங்கிரஸ் தலைமை எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் மேலிடம் விசாரணையை தொடங்கியுள்ளது.

 முதல்கட்டமாக, மேலிட தலைவர்கள் தினேஷ் குண்டுராவ், வல்ல பிரசாத் ஆகியோரிடம் நேற்று முன்தினம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே விசாரணை நடத்தினார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர், இரண்டு காரணங்களை முன்வைத்து அங்கு முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கைகளை கார்கேவிடம் தெரிவிக்க உள்ள நிலையில், அவர்களிடம் கட்சியினரின் மோதல் தொடர்பாக நேற்று அகில இந்திய அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் விசாரணை நடத்தினார்.

மோதல் தொடர்பான அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார். மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியிடமும், ரூபி மனோகரனை இடை நீக்கம் செய்தது குறித்து விசாரணை நடத்தியதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலிடத்தில் நடைபெறும் தொடர் கிடுக்கிப்பிடி விசாரணைகளால் தமிழக காங்கிரசில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories: