விதிமுறை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் சீல் வைக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை:  சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:  சென்னை மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்பு துறையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் கட்டிட மற்றும் திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில் தான் கட்டிடங்களை கட்ட வேண்டும். அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கண்டறியப்பட்டு கட்டிட உரிமையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப்படும்.

மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை மூடி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும். அதனடிப்படையில், 15  மண்டலங்களிலும் கடந்த 13ம் தேதி முதல் 26ம் தேதி வரை சம்பந்தப்பட்ட பொறியாளர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அனுமதிக்கு  மாறாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டிட அனுமதியின்றி  கட்டப்பட்டுள்ள 175 கட்டுமான இடங்களின் உரிமையாளர்களுக்கு தொடர்புடைய கட்டுமான இடம் பூட்டி சீல் வைக்கப்படும் என  குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க குறிப்பாணை வழங்கி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதி மீறல்களை திருத்திக் கொள்ளாத 10  கட்டுமான இடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுபோன்று விதிமீறல் கட்டிடங்கள் நாள்தோறும் மாநகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே கட்டிட உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படி கட்டிடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மூடி சீல் வைப்பதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related Stories: