தங்கச்சிமடம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி 4 பேர் கடலில் தத்தளிப்பு: சக மீனவர்கள் மீட்டனர்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கப்பல் ேமாதியதில் நாட்டுப்படகு கவிழ்ந்து தங்கச்சிமடம் மீனவர்கள் 4 பேர் கடலில் தத்தளித்தனர். சக மீனவர்கள் 4 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த கில்மான், சபரி, சுவிங்டன், அந்தோணி சிaலுவை ஆகிய 4 மீனவர்கள், சூசையப்பர்பட்டினம் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் அந்தோணி அடிமை என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படை கப்பல், நாட்டுப்படகு மீது மோதியது.

இதில் பலகைகள் உடைந்து படகு கடலில் மூழ்கத்தொடங்கியது. படகில் இருந்த 4 பேரும் கடலில் குதித்து உயிருக்கு போராடினர். கடலில் தத்தளித்த மீனவர்கள் மற்றும் சேதமடைந்த படகினை, ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகில் சென்ற சக மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் அழைத்து வந்தனர். இலங்கை கடற்படை கப்பல் மோதியது குறித்து நாட்டுப்படகு உரிமையாளர், ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: