குருவாயூர் கோயிலில் பரபரப்பு; பாகனை தூக்கி வீச முயன்ற யானை: புதுமண தம்பதி போட்டோ எடுத்த போது விபரீதம்

திருவனந்தபுரம்: குருவாயூர்  கோயிலில் திருமணத்திற்குப் பின் புதுமண தம்பதி யானை அருகே நின்று போட்டோ எடுக்க  முயன்றபோது யானை மிரண்டு பாகனை தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேரளாவிலுள்ள  பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று குருவாயூர் கிருஷ்ணன்  கோயில். இக்கோயிலில் தாலி கட்டிய ஒரு இளம் ஜோடி  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது  தாமோதர தாஸ் என்ற கோயில் யானை சென்று கொண்டிருந்தது. யானையின் மேல் ஒரு  பாகனும், அருகே ராதாகிருஷ்ணன் என்ற இன்னொரு பாகனும் சென்று கொண்டிருந்தனர்.  யானையின் அருகே நின்று போட்டோ எடுக்க அந்த திருமண ஜோடிக்கு ஆவல் ஏற்பட்டது.

போட்டோகிராபர் அந்த திருமண ஜோடியை யானைக்கு அருகே  நிற்க வைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் கேமரா  பிளாஷ் வெளிச்சம் அடித்ததால் யானை திடீரென மிரண்டது. பிளிறியபடியே வட்டம்  சுற்றிய அந்த யானை, அருகில் இருந்த பாகன் ராதாகிருஷ்ணனை தும்பிக்கையால்  பிடித்து வீச முயன்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பாகனின் வேட்டி மட்டுமே  யானையிடம் சிக்கியது. வேட்டியை பறிகொடுத்த அந்த பாகன் உயிர்பிழைத்தால்  போதும் என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். போட்டோ எடுக்க முயன்ற திருமண  ஜோடியும், அங்கிருந்தவர்களும் அலறியடித்தபடி ஓடினர். சிறிது நேரத்திலேயே  யானையை அதன் மேல் இருந்த பாகன்  கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த  சம்பவத்தால் குருவாயூர் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: