கொரோனா ஊரடங்கால் 10 பேர் தீயில் கருகி பலி; சீனாவில் தீவிரமடையும் போராட்டம்

பீஜிங்: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்த நிலையில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து சீனாவில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சீனாவில் கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்ட நிலையில், தற்போது சீனாவில் மட்டும் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே கொரோனாவுக்கு எதிராக சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வந்தது.

ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் அவர் வசிக்கும் குடியிருப்பு, அதை சுற்றிய பகுதியை முடக்கி அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டாலும் ஒட்டு மொத்த நகருக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அந்நாட்டில் தினசரி தொற்று 33 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாத சீன அரசு ஜின்ஜியாங் உள்ளிட்ட பல மாகாணங்களில் தீவிர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. குறிப்பாக, 4 லட்சம் மக்கள் வசிக்கும் உரும்கி நகரில் 100 நாட்களுக்கு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான ஊரடங்கால் மீட்பு பணிகள் தாமதமடைந்த நிலையில் தீயில் கருகி 10 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்நகரில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அடித்து விரட்டியதால் வன்முறை ஏற்பட்டது. இதனால் உரும்கி நகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதே போல, பல மாகாணங்களிலும் ஊரடங்கை தளர்த்தக் கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடும் சம்பவங்கள் தீவிரமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: