×

பழநி வரும் ஐயப்ப பக்தர்களை கவர்ந்திழுக்கும் ‘டாட்டூ’

பழநி: பழநியில் ‘டாட்டூ’ குத்துவதற்கு ஒரே ஊசியை பயன்படுத்த கூடாதென சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிகளவு வருகின்றனர். ஐயப்ப பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாநிலத்தவர்களும் அதிகளவு குவிந்துள்ளனர். மத்தளம், மூங்கில் பொருட்கள், பிளாஸ் ஆப் பாரீஸ் வகை மாவினால் செய்யப்பட்ட பொம்மைகள் போன்றவைற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்காக சிவகிரிப்பட்டி பைபாஸ் டெண்ட் அமைத்து 500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கி உள்ளனர். இவர்களில் சிலர் தற்போது பழநி வரும் ஐயப்ப பக்தர்களுக்கு இயந்திரங்களின் மூலம் டாட்டூ எனும் நவநாகரீக பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தேவர் சிலை, கிரி வீதிகளில் ஏராளமானோர் சாலையோரங்களில் டென்ட் அமைத்து டாட்டூ வரைந்து வருகின்றனர். ஒரு எழுத்திற்கு ரூ.50 வசூலிக்கின்றனர். உருவங்கள் மற்றும் சின்னங்கள் வரைவதற்கு அவற்றின் தன்மைகேற்ப ரூ.300 வரை வசூலிக்கின்றனர்.

விலை மலிவு என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் ஆவலுடன் டாட்டூ வரைந்து செல்கின்றனர். இந்நிலையில் டாட்டூ வரைய பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் பொருத்தப்படும் ஊசிகள் மாற்றப்படுகிறதா என்ற ஐயம் பக்தர்கள் மத்தியில் எழுந்தள்ளது. ஊசி மாற்றாமல் பயன்படுத்தினால் பக்தர்களுக்கு நோய்த்தாற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள் டாட்டூ வரையும் தொழிலாளர்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் கூறுகையில், ‘‘டாட்டூ வரையும் தொழிலாளர்களிடம் ரத்த பரிமாற்ற தொற்று நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒரே ஊசியை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் டாட்டூ வரைந்து கொள்ளும் பக்தர்களிடமே அந்த ஊசியை வழங்க வேண்டுமென அறிவுறுத்த வேண்டும். ஒரே ஊசியை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் கைது மற்றும் அபராதம் போன்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எச்சரிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : 'Tattoo' attracts Ayyappa devotees who come to Palani
× RELATED தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி...