உடுமலை- பழனி ரோட்டில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்: போக்குவரத்து ஸ்தம்பிப்பு

உடுமலை: குடிநீர் வராததை கண்டித்து, உடுமலை- பழனி சாலையில் கிராம மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் அருகே மைவாடி ஊராட்சி உள்ளது. இங்குள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில், ஆவேசமடைந்த கிராம மக்கள் இன்று காலை 7.30 மணிக்கு காலி குடங்களுடன், உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் 150 பெண்கள் உட்பட 250 பேர் பங்கேற்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இத்தகவல் அறிந்த மடத்துக்குளம் போலீஸ் எஸ்ஐ., சக்திவேல் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், தண்ணீர் இல்லாமல் குடிக்கவும், குளிக்கவும் வழியில்லாமல் அவதிப்படுகிறோம். பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து, மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: