×

தாம்பரம் அருகே கவுரிவாக்கத்தில் நகைகடையை உடைத்து ஒரு கோடி ரூபாய் நகை கொள்ளை: 2 மணி நேரத்தில் 3 குற்றவாளிகளும் கைது; நகைகள் முழுமையாக பறிமுதல்

சென்னை: தாம்பரம் அருகே நகைக்கடையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், வைரத்தை கொள்ளையடித்து தப்பிய ஆசாமிகள் 3 பேரை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை கவுரிவாக்கம் பகுதியில் ப்ளூ ஸ்டோன் என்ற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் நகைக்கடை உள்ளது. கீழ் தளம், முதல் மாடி, 2வது மாடியில் இந்த கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ஜெகதீசன். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு உரிமையாளர் ஜெகதீசன் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். இரவு காவலாளி, கடையின் முன்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஜெகதீசனின் செல்போனுக்கு எச்சரிக்கை ஒலி வந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவர், அலறியடித்து எழுந்தார். நகைக்கடையில் இருந்து அலாரம் ஒலித்ததால் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களும் வந்தனர். அவர்களது உதவியுடன் கடையை திறந்து போலீசார் பார்த்தனர். வாடிக்கையாளர்களின் பார்வைக்காக டிஸ்பிளேயில் வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதற்கிடையில், துணை ஆணையர் சிபிசக்கரவர்த்தி, சேலையூர் உதவி ஆணையர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், நகைக்கடை ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கடையில் பொருப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்தனர். அதில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்த்தபோது, ஒல்லியான உருவம் கொண்ட நபர் தனது சட்டையை கழற்றி, அதை முகத்தில் கட்டி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.

ஒரு டீக்கடையில் அந்த உருவத்தை போலீசார் காட்டியபோது, ‘இப்போதுதான் அந்த நபர் இங்கு டீ குடித்து விட்டு சென்றார்’ என அந்த உரிமையாளர் தெரிவித்தார். உடனே உஷாரான போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அவர் அதே பகுதியில் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கு, கொள்ளையடித்த நபர் இருந்தார். அவருடன் மேலும் 2 பேர் இருந்தனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். நகைகளை தேடினர். அந்த அறையின் மேல் பகுதியில் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் தெரியவந்த திடுக் தகவல்கள் வருமாறு:

அவரது பெயர் அலி (17). அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். கொள்ளையடிக்கப்பட்ட கடையின் அருகில் உள்ள ஜூஸ் கடையில்தான் வேலை பார்த்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இங்கு வந்துள்ளார். அவருடன் 3 பேர் தங்கியிருந்தனர். சில நாட்களாக அந்த நகைக்கடையை நோட்டமிட்டுள்ளார். ஆட்கள் நடமாட்டம் குறைவான நேரத்தில் அதிகாலை நேரம் பார்த்து கொள்ளையடிக்க திட்டம் வகுத்திருந்தார். அதன்படி இன்று அதிகாலையில் நகைக்கடையின் இடதுபுறம் உள்ள பைப் வழியாக சுவரின் மேல் மாடிக்கு ஏறியுள்ளார். அங்கு, லிப்ட்க்கு செல்லும் வழியில் உள்ள மின்விசிறியை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.

பின்னர் லிப்ட் கதவை உடைத்து நகை்கடைக்குள் புகுந்துள்ளார். பின்னர், ஆரஞ்சு நிற பெனியனை கழற்றி முகத்தில் மூடி கொண்டு நகைகள் மற்றும் வைர நகைகளை எடுத்து கொண்டு பெனியனில் மூட்டையாக கட்டியுள்ளார். லாக்கரை உடைக்க முடியவில்லை. அதனால் பல லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பியுள்ளது. பின்னர், லிப்ட் வழியாகவே வெளியே பக்கத்து கடையின் கட்டித்தில் குதித்து தப்பியுள்ளார்.

கடைக்கு வெளியே 2 பேர் ஆள் நடமாட்டம் குறித்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். பின்னர் 3 பேரும் தப்பிச் சென்றனர் என்று தெரியவந்தது.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையடித்த வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் 2 மணி நேரத்தில் பிடித்து கைது செய்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர். கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் முழுமையாக மீட்கப்பட்டது.

Tags : Kaurivakkam ,Tambaram , 1 crore rupees jewelery robbery after breaking into a jewelery shop at Kaurivakkam near Tambaram: 3 criminals arrested in 2 hours; Complete confiscation of jewelry
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...