166 பேரை கொன்று குவித்த மும்பை தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் நிறைவு: வெளியுறவு அமைச்சர் உருக்கம்

புதுடெல்லி: மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பரபரப்பு பதிவை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானின் லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாத கும்பல், கடந்த 2008ம் ஆண்டு நவ. 26ம் தேதி கடல்மார்க்கமாக மும்பை நகருக்குள் ஊடுருவி பல குழுக்களாக பிரிந்து மும்பையின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். ரயில் நிலையம், ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், தாஜ் ஓட்டல், லியோபோல்டு கபே, காமா மருத்துவமனை, நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களிலும் தாக்குதலை அரங்கேற்றினர்.

மொத்தம் 12 இடங்களில் கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியாக 4 நாட்கள் நீடித்த இந்த கோர தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், வெளிநாட்டினர், போலீசார் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். தீவிரவாதி அஜ்மல் கசாப்பை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மற்ற 9 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிடிபட்ட அஜ்மல் கசாப்பு 2012ல் புனே ஏரவாடா ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான். பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் 26/11 என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது.

தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் (சனிக்கிழமை) 14 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மும்பை மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். இருப்பினும் மக்களின் மனதில் ஏற்பட்ட வலியும், துயரமும் நீங்கவில்லை. மும்பை மட்டும் இன்றி உலகில் எங்கும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறக்கூடாது என்பதே அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வெளியிட்ட பதிவில், ‘தீவிரவாதம் மனித குலத்தை அச்சுறுத்துகிறது. இன்று, 26/11ல் பாதிக்கப்பட்டவர்களை இந்தியா நினைவுகூருகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்களின் பின்னணியில் இருந்தவர்களை, நீதியின் முன் நிறுத்த வேண்டும். உலகம் முழுவதும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் இந்தியா உள்ளது’ என்று கூறியுள்ளார்.

Related Stories: