×

இறக்குமதியில் வரி ஏய்ப்பு; அதிமுக பிரமுகர் குடோனில் 8 மணி நேரம் ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கின

சேலம்: பொதுவிநியோக திட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பருப்பு மற்றும் பாமாயிலை 5 நிறுவனங்கள் இறக்குமதி செய்கிறது. இவ்வாறு இறக்குமதி செய்ததில் ஒன்றிய அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 23ம் தேதி தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை 5 நிறுவனங்களில் நடந்தது. சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங் கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த சந்தீப் என்பவரது பருப்பு குடோன் சேலம் அன்னதானப்பட்டி மேட்டு வெள்ளாளர் தெருவில் உள்ளது. இது அதிமுக பிரமுகர் மோகன் என்பவருக்கு சொந்தமான குடோனாகும். இந்த குடோனை நேற்று முன்தினம் சோதனையிட வருமானவரித்துறையை சேர்ந்த அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கிருந்த மர்மநபர்கள் அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களை எச்சரித்து குடோனுக்கு சீல் வைத்து சென்றனர். இதைதொடர்ந்து நேற்று மாலை சுமார் 5 மணியளவில் சென்னை வருமானவரித்துறை இன்ஸ்பெக்டர் வம்சி கிருஷ்ணா சாரா, தர்மபுரி வருமான வரித்துறை அதிகாரி நாகராஜ் உள்பட 5 அதிகாரிகள் வந்தனர். ஏற்கனவே பிரச்னை நடந்ததால் மாநகர காவல்துறையினரை பாதுகாப்புக்கு வரவழைத்தனர்.

அதிகாரிகள் குடோனில் உள்ள பருப்பின் இருப்பு குறித்து விசாரணை நடத்தினர். குடோனின் சூப்பர்வைசர் அழகு முத்துவிடம் விசாரணை நடத்தினர். அங்கு 400 டன் பருப்பு இருப் பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிகாலை 1.15 மணிக்கு தங்களுடைய சோதனையை முடித்துக் கொண்டனர். இந்த சோதனை 8 மணி நேரம் நடந்துள்ளது. இச்சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வில் அந்த குடோன் உரிமையாளர் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்பது தெரியவரும். அவ்வாறு வரி ஏய்ப்பு செய்து இருந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : AIADMK , evasion of duty on imports; 8-hour IT raid on AIADMK leader's godown: Important documents seized
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...