மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முதல்வர் விருது-சென்னை மாநாட்டில் வழங்கி பாராட்டு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரப்பணியில் சிறப்பாக செயல்பட்ட மோகனூர், பவித்திரம் மற்றும் பில்லிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும், சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கிராமப்புற சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மலை கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மக்கள், தங்கள் வசிப்பிடத்திலேயே தரமான மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 61 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் போதுமான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருக்கிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவ சேவையில் நிலையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்த,  நிலையான வளர்ச்சி இலக்கு 2030 என்ற திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

 இதையடுத்து, ஒவ்வொரு மாதமும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகள்,  மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மதிப்பீடு செய்து, விருது வழங்கி அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு, மாநில அளவில் 5வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 424 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், மோகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின்  செயல்பாடு சிறப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். கடந்த காலங்களில் உள்நோயாளிகள், புறநோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, கர்ப்பிணிகள் பதிவு, அறுவை சிகிச்சை, குடும்ப நலம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து, மோகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்தில் உள்ள 1,383 கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், நாமக்கல் மாவட்டம் பவித்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 15ம் இடத்தையும், பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 51ம் இடத்தையும் பிடித்துள்ளது.மேலும், 320 நகர சுகாதார நிலையங்களில், குமாரபாளையம் நகர சுகாதார நிலையம் 31வது இடத்தை பெற்றுள்ளது. சென்னையில், சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சுகாதார மாநாட்டில், நிலையான வளர்ச்சி இலக்கு 2030ஐ அடையும் பொருட்டு, சிறந்த முறையில் செயல்பட்ட மோகனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பவித்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குமாரபாளையம் நகர சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு முதல்வர் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்த விருதுகளை சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன், கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் நேற்று காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது மோகனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி, பவித்திரம் மருத்துவ அலுவலர் சேகரன், பில்லிக்கல்பாளையம் மருத்துவ அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோரையும் கலெக்டர் பாராட்டினார்.

Related Stories: