சமூக சேவையில் சிறப்பாக திகழும் நாட்டு நலத்திட்ட பணி மாணவர்கள்

*புதுப்புது திட்டங்களுடன் சிறப்பாக இயங்குகிறது

*சமுதாய மேம்பாட்டிற்கு அயராது உழைக்கும் மாணவர்கள்

திருத்துறைப்பூண்டி : என்எஸ்எஸ் என்கின்ற மூன்றெழுத்து மந்திரச்சொல் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சேவையாற்றி வருகிறது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலங்களிலேயே சமூக சேவைகளில் ஈடுபட தங்களை தயார்படுத்தும் வகையில் என்எஸ்எஸ்-ல் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இன்றைய நவீன சூழலில் கல்வி கற்பது என்பது எங்கிருந்தாலும் கற்றுக்கொள்ள முடியும். எவ்வகையிலும் அறிவை பெருக்கிக் கொள்ள முடியும். ஆனால் நற்சிந்தனைகளை, நல்ல பண்புகளை, நல்நடத்தையை, நல்ல பழக்க வழக்கங்களை, நல்லொழுக்கத்தை, நல்ல குணங்களை, இதுபோன்ற பள்ளி, கல்லூரி சார்ந்த இணை செயல்பாடுகள் மூலம் மட்டுமே மாணவ சமுதாயம் பெற முடியும்.

என்எஸ்எஸ்-ன் செயல்பாடுகளில் மாநில அளவில் திருவாரூர் மாவட்டம் முன்னணி இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 45 மேல்நிலைப்பள்ளிகளில் என்எஸ்எஸ் அமைப்புகள் செயலாற்றி வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதவன், மாயகிருஷ்ணன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரது வழிகாட்டுதலுடன் மிகச்சிறப்பாக இத்திட்டம் நாள்தோறும் புதுப்புது திட்டங்களுடன் சிறப்புற இயங்கி வருகிறது.

45 பள்ளிகளில் உள்ள என்எஸ்எஸ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயலாற்றும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராஜப்பா 2009ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்கின்ற பிரிவில் அனைத்து என்எஸ்எஸ் அமைப்புகளும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக தமிழக அரசின் மஞ்சள் பை திட்டம் போன்ற பல்வேறு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டு தோறும் தூய்மை இந்தியா இரு வார விழா மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு அமைவும் அவரவர் பள்ளிக்கு அருகில் உள்ள பொது இடங்களான புகைவண்டி நிலையம், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்த நிழற்குடை வளாகம், நூலக கட்டிட வளாகங்கள், பூங்காக்கள், கோவில் போன்ற வழிபாட்டிடங்கள் ஆகிய இடங்களில் முழுமையாக தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவ்வப்போது மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, பிட் இந்தியா, ஜல் சக்தி அபியான், போஷாக் அபியான், அனைவருக்கும் யோகா மற்றும் மீண்டும் மஞ்சப்பை, நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் கிராமப்புற மக்களிடையே பிரச்சாரம் செய்தல், பேரணி நடத்துதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பணி களையும் மாணவர்கள் செயலாற்றி வருகின்றனர். நவம்பர் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை மாவட்ட அளவில் அனைத்து என்எஸ்எஸ் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் நூலக வாசிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.

பள்ளிக்கு அருகில் உள்ள மாவட்ட நூலகம் அல்லது கிளை நூலகம் அல்லது ஊர் புற நூலகம் சென்று மாணவர்கள் நூலக பயன்பாடுகள் நூலக வழிமுறைகள் நூலக விதிமுறைகள் நூலக வசதிகள் ஆகியவற்றை தெரிந்து கொள்வதுடன் நூலக உறுப்பினராக வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த திட்டம் தொடர்ந்து 8வது ஆண்டாக செயல்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும். ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து என்எஸ் அமைவுகளும் சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் என்எஸ்எஸ் மாணவர்கள் களப்பயணமாக. வடுவூர் பறவைகள் சரணாலயம், உதயமார்த்தாண்டபுரம் சரணாலயம். முத்துப்பேட்டை லகூன் அலையாத்தி காடுகள், மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர் மாவட்ட தலைமை மருத்துவக்கல்லூரி போன்ற பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே.

நேரடியாக பயிற்சியும் பெற்று வருகின்றனர். இது தவிர என்எஸ்எஸ்-ன் முத்தாய்ப்பான திட்டமான ஏழு நாள் சிறப்பு முகாமின் போது ஒவ்வொரு பள்ளியும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் எண்ணிலடங்காத பணிகளை கிராமத்தில் தங்கி இருந்து செயலாற்றி வருகின்றனர். வரும் டிசம்பர் மாதத்தில் 25 குறுங்காடுகள் அமைத்து பசுமை பரப்பை அதிகரிக்கும் பணி மேற்கொள்ள பட உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் என்எஸ்எஸ் செயல்பாடுகளை மேலும் சிறப்பாக்கும் வகையில். கடந்த 2018ம் ஆண்டு முதல் என்எஸ்எஸ் அமைப்புகள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு அவர்களுடைய பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், பணிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பணியாற்றுபவர்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி ஏற்படுத்தும் வகையிலும். 3 சுழற் கோப்பைகள் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் வண்ணமிகு விழாவில் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் சக்கரபாணி 2012-2013ம் ஆண்டு மாநில அளவிலான சிறந்த திட்ட அலுவலர் விருதை பெற்றார்.

மாணவர் லோகநாதன் மாநில அளவிலான சிறந்த என்எஸ்எஸ் மாணவர் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் திட்ட அலுவலராக பணியாற்றிய பல ஆசிரிய பெருமக்கள் தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்று வருவதும் மிகவும் பெருமைக்குரியதாகும் அண்மைக்காலத்தில் ராஜப்பா-மன்னார்குடி, சக்கரபாணி-திருத்துறைப்பூண்டி. பிளவர்பாய்-திருத்துறைப்பூண்டி, மணிவண்ணன்-புள்ளமங்கலம், சாந்தி, சுகுமாரன் - மன்னார்குடி என பல என்எஸ்எஸ் திட்ட அலுவலர்களாக பணியாற்றியவர்கள் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் ஆவார். சமுதாய மேம்பாட்டிற்கு அயராது உழைத்திடும் அன்பு மாணவத் தொண்டர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் திட்ட அலுவலர்கள் பணி ஓங்குக. நாட்டு நலப்பணி திட்டம் இன்னும் பல நூறு ஆண்டுகள் வெற்றி நடைபோடட்டும்.

Related Stories: