முதியவர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் 20 மீட்டர் தூரத்திற்கு பறந்து தென்னை மரத்தில் மோதிய கார்-கும்பகோணம் அருகே பரபரப்பு

கும்பகோணம் : கும்பகோணம் அருகே சாலையில் சென்ற முதியவர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால், 20 மீட்டர் தூரத்திற்கு பறந்து தென்னை மரத்தில் கார் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரி, சுபாஷ் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணா (34). இவரது மனைவி சிவானி (29). பெங்களூரை சேர்ந்தவர் மோகன் (34). இவரது மனைவி பூவிழி (28). நண்பர்களான இந்த இரண்டு தம்பதியினரும் பெங்களூரில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று காலை தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பின்னர் மதியம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோயிலுக்கு கும்பகோணம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை  கிருஷ்ணா ஓட்டி வந்துள்ளார். அப்போது கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி கடைவீதியில் நேற்று மதியம் வந்து கொண்டிருந்தபோது அகராத்தூர் ஊராட்சி கொத்தவாசலை சேர்ந்த சண்முகம் (70) என்பவர் சாலையின் குறுக்கே சென்றுள்ளார்.

அப்போது காரை வேகமாக ஓட்டி வந்த கிருஷ்ணா, முதியவர் சண்முகம் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், 20 மீட்டர் தூரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது பறந்து மோதி விபத்துக்குள்ளானது.இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயத்துடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து சோழபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: