×

கொள்ளையன் மனைவியிடம் கூகுள்பே மூலம் பணம் பறித்த போலீஸ் ஏட்டு: மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி

மதுரை: கொள்ளையன் மனைவியிடம் கூகுள்பே மூலம் பணம் பறித்ததாக ஏட்டு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை, மதிச்சியம் போலீஸ் ஸ்டேசனில் ஏட்டுவாக இருப்பவர் ராமச்சந்திரன் (43). இவர் இதற்கு முன்பு கூடல்புதூரில் போலீஸ்காரராக இருந்தார். அப்போது திருப்பத்தூர்  மாவட்டம், ஆம்பூர் தாலுகா, துத்திமேடை சேர்ந்த கணேசன் என்பவரை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூடல் புதூர் போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம், உமரபேட்டை காவல்நிலைத்தில் கணேசன் மனைவி சுவிதாவிடம், ஏட்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார். அப்போது அவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு சுவிதா மறுத்து விட்டார்.  பின்னர் கொள்ளை வழக்கில் ஜாமீனில் வந்த கணேசன், தந்தை துரைசாமி, நண்பர்கள் சீனிவாசன், ராஜா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கு தொடர்பாக மதுரைக்கு வந்தனர்.

அவர்களிடம் ஏட்டு ராமச்சந்திரன், ‘மரியாதையாக ரூ.50 ஆயிரம் கொடு. இல்லையெனில் குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவேன்’ என மிரட்டி உள்ளார். அதற்கு துரைசாமி, ‘என்னிடம் அவ்வளவு பணம் இல்லை’ என தெரிவித்துள்ளார். பின்னர் ஏட்டு ராமச்சந்திரன், அவரிடம் கூகுள்பே மூலம் ரூ.15 ஆயிரத்தை பெற்றிருக்கிறார். அதன் பிறகு ராமச்சந்திரன் பல்வேறு தருணங்களில், கணேசன் குடும்பத்தினரிடம் ரூ.72 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. இதுகுறித்து சுவிதா மதுரை மாவட்ட லஞ்ச போலீசில் புகார் செய்தார்.   

ஏட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Madurai , Robber's wife, police officer who extorted money through Google Pay, anti-bribery police
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...