×

தாம்பரத்தில் துணிகர சம்பவம் ரூ.5 லட்சம் கேட்டு கடைக்காரர் கடத்தல்: திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது

தாம்பரம்: தாம்பரத்தில் ரூ.5 லட்சம் கேட்டு, ஜூஸ் கடைக்காரரை காரில் கடத்திய, திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் உசேன் (30). இவர், தாம்பரம் அருகே ஜிஎஸ்டி சாலை இரும்புலியூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு அவரது கடைக்கு காரில் வந்த 5 பேர், நாங்கள் திரிபுரா போலீசார், ஒரு வழக்கு சம்பந்தமாக உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும். காரில் இன்ஸ்பெக்டர் உள்ளார்  எனக்கூறி, அவரை அழைத்து சென்றனர். முகமது அன்வர் உசேன், அந்த காரின் அருகே சென்றபோது, திடீரென அவரை காரின் உள்ளே தள்ளி, வாயை பொத்தி, கருப்பு துணியால் கண் மற்றும் கை, கால்களை கட்டி, கடத்தி சென்றனர். பின்னர், கையை துப்பாக்கிபோல் வைத்து, தங்களுக்கு ரூ.5 லட்சம் வேண்டும். இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவோம், என்று மிரட்டியுள்ளனர்.

இதனால், பயந்துபோன முகமது அன்வர் உசேன், தன்னிடம் ரூ.5 லட்சம் இல்லை. வங்கியில் கணக்கில் ரூ.90 ஆயிரம் மட்மே உள்ளது அதை எடுத்து தருகிறேன், என்னை விட்டு விடுங்கள் என கூறியுள்ளார். உடனே, அந்த மர்ம கும்பல், ஒரு ஏடிஎம் முன்பு காரை நிறுத்தியது. பின்னர், ரூ.90 ஆயிரத்தை எடுத்து, முகமது அன்வர் உசேன் அந்த மர்ம கும்பலிடம் கொடுத்தார். பின்பு, தாழம்பூர் பகுதியில் காரில் இருந்த முகமது அன்வர் உசேன் இறக்கிவிட்டு, மர்ம கும்பல் தப்பியது.
இதுகுறித்து முகமது அன்வர் உசேன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தாம்பரம் போலீசார், தனிப்படை அமைத்து, இரும்புலியூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, கேளம்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த காரை, போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது, அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தால், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அல்காஸ்மியா (32), ஜலீல்மியா (23), பெர்வெஜ் மியா (26) என்பதும், அவர்கள் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் எனவும், இவர்கள் 3 பேர் மற்றும் திரிபுரா மாநிலத்திற்கு தப்பிச்சென்ற 3 போர் என மொத்தம் 6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து, வசதியாக வாழ்ந்து வரும் தங்களுக்கு தெரிந்த நபர்களை குறிவைத்து, கடத்தலில் ஈடுபட்டு, பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட 3 பேர், திரிபுரா மாநிலத்திற்கு தப்பி சென்றனர். இவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார், திரிபுரா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

Tags : Tambaram ,Tripura , Adventure incident in Tambaram shopkeeper kidnapping for Rs 5 lakh: 3 persons from Tripura state arrested
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!