×

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும் அரசு நிலங்கள் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13,293 சதுர அடி பரப்பளவு நாடக கொட்டாய் இடத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டார். இதை தொடர்ந்து, வார்டு 60க்குட்பட்ட அங்கப்ப நாயக்கன் தெருவில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 1,680 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை பார்வையிட்டு, அங்கு சென்னை உருது நடுநிலைப் பள்ளியின் கூடுதல் வகுப்பறைகளுக்கு பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினர் உள்பட பலரும் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியிலும் ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை கொண்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வால்டாக்ஸ் சாலை பகுதியில் உள்ள பழமைவாய்ந்த நாடகக் கொட்டாய் இடம் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மாநகராட்சியால் மீட்கப்பட்டுள்ளது. இந்த இடம் 13,293 சதுர அடி பரப்பளவு கொண்டது.

இந்த இடம் மிகவும் பெருமைக்குரிய கலைத்துறைக்காக பயன்படுத்திய பழமை வாய்ந்த இடம். கடந்த பல ஆண்டுகளாக ஒரு சில தனியாரிடம் ஆக்கிரமிப்பிலிருந்து தற்போது மீட்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அங்கப்பன் நாயக்கன் தெருவில் சென்னை உருது நடுநிலைப் பள்ளிக்கு பின்புறம் 1,680 ச.அ. பரப்பளவு கொண்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடமும் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது. இந்த உருது நடுநிலைப்பள்ளியில் 90% அதிகமாக சிறுபான்மையின மாணவர்களே பயில்கின்றனர். போதிய கட்டிட வசதி இல்லாமல் இப்பள்ளி இயங்கி வருகிறது.

தற்சமயம் மீட்கப்பட்டுள்ள இந்த இடத்தில் இப்பள்ளிக்கான கூடுதல் வகுப்பைறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடத்தில் வருவாய் நோக்கத்தோடு பணிகளை மேற்கொள்ளாமல் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநகராட்சியின் சார்பில் விக்டோரியா மஹாலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு பணிபுரிந்த எந்த பணியாளர்களையும் நிறுத்தவில்லை. மாநகராட்சியின் அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு சிவராத்திரி திருவிழா அறநிலையத்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக காளிகாம்பாள் கோயிலில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு சிவராத்திரி திருவிழா 5 இடங்களில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் நமது மாநிலத்தில் உள்ள ராமேஸ்வரம் கோயிலுக்கு அதிகளவு வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.160 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு நபர் கமிட்டியின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுப்பார். தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Shekharbabu , Government lands recovered from encroachers will be used for basic needs of people: Minister Shekharbabu informs
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...