×

தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தமிழக அரசு உறுதி

சென்னை: தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
டாடா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள ஜிஎம்ஆர் தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து வருகிறது. ரூ.4,684 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் மூலம் ஏறத்தாழ 18,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக பத்திரிகை செய்திகளும், புகார்களும் அரசிற்கு வந்து கொண்டிருக்கின்றன.  இந்த நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டை சார்ந்த ஏறத்தாழ 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தியை தொடங்கும்போது பணியாளர் தேவையில் ஏறத்தாழ 80 சதவீதம் பணியிடங்களுக்கு தமிழ்நாட்டை சார்ந்தவர்களை நியமிக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பொறுப்புறுதி அளித்துள்ளது.

பணி நியமனத்தில் தமிழ்நாட்டை சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு (மற்றும்) வர்த்தக துறை செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் ஆகியோர் இந்நிறுவனத்துடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.  இதனை தொடர்ந்து, இந்நிறுவனம் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வாயிலாக நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, சிவகங்கை, வேலூர், மதுரை, திருநெல்வேலி, தேனி, காஞ்சிபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விருதுநகர், தஞ்சாவூர், தென்காசி, நாகப்பட்டினம், நாகர்கோவில், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 7,559 பேர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், 1,993 பேருக்கு தற்போது வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 355 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu , Government of Tamil Nadu assures priority in industrial companies, employment
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...