சோலார் பேனல் மோசடி உணவில் விஷம் கலந்து கொடுத்து சரிதா நாயரை கொல்ல முயற்சி: முன்னாள் டிரைவர் மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயரை அவரது முன்னாள் டிரைவர் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சித்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கேரளா, தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்ககணக்கில் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் கேரள மாநிலம், செங்கனூரை சேர்ந்த சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 10 வருடங்களுக்கு முன் உம்மன்சாண்டி ஆட்சியின்போது இந்த மோசடி நடந்தது. முதல்வராக இருந்தபோது உம்மன்சாண்டி, அமைச்சர்கள், பாஜ அகில இந்திய துணை பொது செயலாளர்அப்துல்லா குட்டி உள்பட பலர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் இவர் பரபரப்பு புகார் கூறினார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் சரிதா நாயர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பது: சில மாதங்களுக்கு முன் எனக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனது இடது கண் பார்வை குறைந்தது.  தலைமுடி முழுவதும் கொட்டி விட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். பரிசோதனையில் எனது ரத்தத்தில் அதிக அளவில் ஆர்சனிக், பாதரசம் மற்றும் ஈயம் ஆகிய ரசாயன விஷப்பொருள் கலந்திருந்தது தெரியவந்தது. எனக்கு உணவில் விஷப்பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனால், யார் அதை கலந்திருப்பார்கள் என தெரியாததால் நான் போலீசில் முதலில் புகார் கொடுக்கவில்லை.  கடந்த ஜனவரி 3ம் தேதி ஒரு பயணத்தின் போது திருவனந்தபுரத்தில் ஒரு கடையில் ஜூஸ் குடிப்பதற்காக சென்றேன். என்னிடம் டிரைவராக இருந்த வினு குமார் ஜூசில் ஏதோ கலப்பதை தற்செயலாக பார்த்தேன்.

அப்போதுதான் எனக்கு உணவில் விஷம் கலந்தது வினு குமார்தான் என்பதை நான் உறுதி செய்தேன். கடந்த 2018ம் ஆண்டு முதல் அவர் எனக்கு உணவில் விஷம் கலந்துள்ளார். நான் பலாத்கார புகார் கொடுத்த சிலருடன் சதித் திட்டம் தீட்டி அவர் என்னை கொல்ல திட்டமிட்டிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.  பணத்திற்காகத் தான் வினு குமார் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம். எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் சரிதா நாயர் கூறியுள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில் நடந்த சம்பவம் உண்மை என்று தெரியவந்ததை தொடர்ந்து வினு குமார் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: