ஆபாச ஆடியோ விவகாரம் அண்ணாமலையின் தூண்டுதலால் திருச்சி சூர்யா திட்டினாரா?.. கட்சியை விட்டு நீக்காமல், பொறுப்பில் இருந்து மட்டும் நீக்குவது தான் நடவடிக்கையா என பெண்கள் குமுறல்

சென்னை: ஆபாச ஆடியோ விவகாரத்தில் திருச்சி சூர்யாவுக்கு ஆதரவாக அண்ணாமலை இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளதால், பாஜவில் உள்ள பெண்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அண்ணாமலை தூண்டி விட்டதால்தான் அவர் பேசினார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

பாஜவில் மூத்த தலைவர்களை மாநில தலைவர் அண்ணாமலை ஓரங்கட்டுவதாகவும், மதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அவர் மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய அமைச்சர் முருகன், எச்.ராஜா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களிடம் ஆலோசனை நடத்துவதில்லை. தான் ஒருவர் மட்டுமே கட்சியில் இருப்பதுபோன்ற நிலையை உருவாக்கி வருகிறார். தனக்கு மட்டுமே ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடுகிறது என்று நிரூபிப்பதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அண்ணாமலைக்கும், நடிகை காயத்திரி ரகுராமுக்கும் இடையே மோதல் எழுந்தது. காயத்திரியை மட்டும் தட்டி வைக்கும் வேலையில் அண்ணாமலை இறங்கினார். இதனால் அவர் பொங்கி எழுந்து, இணைய தளங்களில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி வந்தார். இரு நாட்களுக்கு முன்னர் காயத்திரி ரகுராமை மட்டும் கட்சியில் இருந்து அண்ணாமலை அதிரடியாக நீக்கினார். அதேநாளில்தான் திருச்சி சூர்யா- சிறுபான்மையினர் மாநில நிர்வாகி டெய்சி சரணுக்கு இடையே நடந்த ஆபாச உரையாடல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதால், டெல்லி தலைமையும் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதனால், நேற்று இருவரிடமும் விசாரணை நடந்தது. விசாரணையில் டெய்சியை ஆபாசமாக பேசியதும், வெட்டி மெரினாவில் வீசுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததையும் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து மாலையில் திருச்சி சூர்யாவின் கட்சிப் பொறுப்புகளை பறித்து அண்ணாமலை உத்தரவிட்டார். ஆனால் கட்சியை விட்டு நீக்கவில்லை. காயத்திரியை கட்சியை விட்டு நீக்கிய அண்ணாமலை, திருச்சி சூர்யாவை நீக்காமல் இருந்தது ஏன் என தற்போது பாஜவில் உள்ள பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காயத்திரிக்கு ஒரு நீதி, திருச்சி சூர்யாவுக்கு ஒரு நீதியா? மேலும், அண்ணாமலை சொல்லித்தான் டெய்சியை சூர்யா திட்டுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு எதிராக செயல்படுவதாக கருதுகிறவர்களுக்கு எல்லாம் அவர் இதுபோன்று மிரட்டல் விடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் சூர்யா மிரட்டும்போது மோடிகிட்ட போறீயா, அமித்ஷா, நட்டாவிடம் போறீயா? எங்க வேணும்னாலும்போ என்று மிரட்டுவார். அண்ணாமலையை மட்டும் கூற மாட்டார். ஏனெனில் அண்ணாமலை சொல்லித்தான் இந்த மிரட்டலில் அவர் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அவரை கட்சியை விட்டு நீக்காமல், பொறுப்புகளை மட்டுமே பறித்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஆடியோ கடந்த 21ம் தேதிதான் வெளியானது. அப்போது கருத்து தெரிவித்த, டெய்சி, 15 நாளுக்கு முன்னரே இதுபற்றி அண்ணாமலையிடம் புகார் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். அப்படி என்றால், 5ம் தேதிக்கு முன்னரே அவர் புகார் செய்திருக்கலாம். இதை அண்ணாமலைக்கு நெருக்கமான அமர்பிரசாத் ரெட்டி ஒப்புக் கொண்டுள்ளார். அதோடு, அப்போது விசாரணைக்கு சூர்யா வரவில்லை என்றும் கூறியுள்ளார். விசாரணைக்கு வராத ஒருவர் மீது ஏன் 15 நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். விசாரணை குழுவை விட சூர்யா பெரியவரா அல்லது அவரை தூண்டி விட்டவர் பெரியவரா என்ற சந்தேகம் பாஜ மகளிர் அணியினர் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், கடந்த 17ம் தேதி அதாவது ஆடியோ வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்னர் அண்ணாமாலை, திருச்சி சூர்யா, கேசவ விநாயகம் ஆகியோர் ஒரே ரயிலில் காசியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்றனர். அதுவும் ஒரே பெட்டியில் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். இதை போட்டோ எடுத்தும் வெளியிட்டுள்ளார் சூர்யா. விசாரணைக்கு வர மறுத்த ஒருவருடன் எப்படி அண்ணாமலை காசி வரை பயணம் செய்தார். இதனால் முழுக்க முழுக்க அண்ணாமலையின் ஆசிர்வாதத்துடன்தான் அவர் பேசினார் என்று கட்சியினர் தற்போது முழுமையாக நம்புகின்றனர்.

அதேபோலதான், கே.டி.ராகவன் விஷயத்திலும் தனக்கு தெரியாது என்று முதலில் மறுத்தவர் பின்னர், வீடியோவை வெளியிட்டவர், அண்ணாமலையுடன் பேசும் ஆடியோவை வெளியிட்டதும் அமைதியாகிவிட்டார். இப்போதும் அதே நாடகம்தான் நடக்கிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாஜ தலைவர்கள் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்படும்நிலையில், இதுபோன்ற விவகாரங்கள் தமிழக பாஜவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கே.டி.ராகவன் விஷயத்திலும் தனக்கு தெரியாது என்று முதலில் மறுத்தவர் பின்னர், வீடியோவை வெளியிட்டவர், அண்ணாமலையுடன் பேசும் ஆடியோவை வெளியிட்டதும் அமைதியாகி விட்டார். இப்போதும் அதே நாடகம்தான் நடக்கிறது

Related Stories: