×

நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்யலாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,03,95,103 பேரும், பெண் வாக்காளர்கள் 3,14,23,321 பேரும், 3ம் பாலினத்தவர் 7,758 பேரும் உள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைப்பது ஆகியவற்றுக்கான படிவங்களை வருகிற 8.12.2022 வரை அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம்.

நவம்பர் 12, 13 (சனி, ஞாயிறு), 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும். www.nvsp.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் ‘வாக்காளர் உதவி’ கைபேசி செயலி மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

2023 ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தி அடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். பெயர் சேர்க்க படிவம் 6ல் விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெயர் சேர்க்க 6ஏ படிவத்தை அளிக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் 2023 ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பி-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்படி கடந்த 12, 13 தேதி (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது. இதில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய 7 லட்சத்து 10,274 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறும்போது, “தமிழகம் முழுவதும் இன்று (26ம் தேதி) மற்றும் நாளை (27ம் தேதி) ஆகிய 2 நாள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது” என்றார்.

Tags : Chief Electoral Officer , Deletion, Correction, Change of Address, Addition of Name to Electoral Roll, Special Camp, Chief Electoral Officer
× RELATED தேசிய சராசரியைவிட தமிழகத்தில்...