×

திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு டிச.6 மற்றும் 7ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு டிச.6 மற்றும் 7ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது.

தீபத்திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக திருவண்ணாமலை கார்த்திகை தீபம் எளிமையாக நடந்தது. தற்போது, இந்தாண்டுக்கான தீபத்திருவிழாவிற்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே 9 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக சிறப்பு ரயில்கள் டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் இயப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஏற்கனவே, தமிழக போக்குவரத்து கழகத்தின் சார்பாக பொதுமக்களின் வசதிக்கேற்ப இந்தாண்டு அனைத்து பகுதிகளில் இருந்தும் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Thiruvannamalai Deepa Festival , Tiruvannamalai Deepa Festival, Special Trains Operation, Southern Railway Announcement
× RELATED திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பரணி,...