×

மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம் தமிழகத்தில் தீவிரவாத அமைப்புக்கு முகமது ஷாரிக் ஆட்கள் திரட்டினாரா?: உளவுத்துறையுடன் இணைந்து போலீசார் ரகசிய விசாரணை

சென்னை: மங்களூரில் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இது குறித்து அம்மாநில போலீசார் விசாரணை நடத்தியபோது, தீவிரவாத அமைப்புகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முகமது ஷாரிக் என்பவரை மங்களூரு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில், ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதற்கிடையே மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிய தற்காப்பு கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதை கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், குண்டு வெடிப்பில் நேரடியாக தொடர்பில் உள்ள முகமது ஷாரிக் தமிழகத்தில் உதகை, கோவை, நாகர்கோவில், மதுரை ஆகிய இடங்களில் தங்கி பணியாற்றியது தெரியவந்துள்ளது.

 முகமது ஷாரிக் தமிழகத்தில் தங்கி இருந்த காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு ஏதேனும் ஆட்களை திரட்டி உள்ளாரா என்று தமிழக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், ஒன்றிய உள்துறை அமைச்சகமும் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள அமைப்புகள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

அதைதொடர்ந்து தமிழகத்தில் இஸ்லாமிய தற்காப்பு கவுன்சில் அமைப்புக்கு தமிழகத்தில் யாரேனும் ஆதரவாக உள்ளார்களா என்பது குறித்து தமிழக உளவுத்துறை போலீசாருடன் இணைந்து, மாவட்ட வாரியாக போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முகமது ஷாரிக் தமிழகத்தில் தங்கி இருந்த காலத்தில் அவரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நண்பர்கள், அவருக்கு உதவியவர்கள், வேலை கொடுத்தவர்கள் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Mohammed Shariq ,Tamil Nadu , Cooker blast issue in Mangalore, terrorist organization in Tamil Nadu, Mohammed Shariq, police secret investigation
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...