×

அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்திய கடைகளுக்கு எதிரான மின்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது

சென்னை: அனுமதி பெறாத தளங்களிலும் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் ஜவுளி கடைகள் மற்றும் நகைக்கடைக்கு எதிராக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை தி.நகரில் உள்ள 2 ஜவுளி கடைகள் மற்றும் ஒரு நகை கடையில் அனுமதி பெறாத தளங்களிலும் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தனித்தனியாக அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுகளை எதிர்த்து அந்த நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. அந்த வழக்குகளில், அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் தான் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால், நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணை வந்தது. அப்போது மின் பகிர்மான கழகம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, மின் இணைப்பு பெறும்போது வழங்கப்பட்ட மின் இணைப்பு வரைபட திட்டத்தையும் மீறி அங்கீகரிக்கப்படாத தளங்களிலும் மின் இணைப்பை பயன்படுத்திவருகின்றனர். அதனடிப்படையில் எடுக்கப்படும் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க கூடாது என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Electricity Department , Electricity Department action against shops using electricity without permission cannot be barred
× RELATED தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 19,409 மெகாவாட் மின்நுகர்வு!!