×

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்புகள் விற்பனை தொடரும்: அமைச்சர் தகவல்

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்புகள் விற்பனை தொடரும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் வர்கீஸ் குரியன் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், நவ.26ம் தேதி தேசிய பால் தினமாக 2014ம் ஆண்டு முதல் கொண்டாப்படுகிறது. இதை முன்னிட்டு, நேற்று சென்னை ஆவின் வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் தேசிய பால் தினம் கொண்டாடப்பட்டது. மேலும், பால் விற்பனை குறித்து கலந்தாய்வு கூட்டமும், ஆவின் குறித்து சிறந்த வாக்கியங்கள் உருவாக்கிய ஐந்து போட்டியாளர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது, பால்வளத்துறை ஆணையர் சுப்பையன், நிர்வாக இயக்குநர் சரயு, பொது மேலாளர்கள் மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது: பால் உற்பத்தியாளர்களையும், நுகர்வோர்களையும் இணைக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆவின் நிறுவனம் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் விரும்பும் வகையில் பல்வேறுவிதமான பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சென்ற தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப காஜூகட்லி, காஜூ பிஸ்தா ரோல், நெய் பாதுஷா, மோத்திபாக் மற்றும் நட்ஸ் அல்வா போன்ற புதிய இனிப்பு வகைகளை விற்பனை செய்துள்ளது. இந்த இனிப்புகள் பொதுமக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று சுமார் ரூ.116 கோடி அளவில் விற்பனை நடந்தது.

அதேபோன்று எதிர்வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை தொடரும். மேலும், வரும் பொங்கல் பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு ஆவினின் 100 மில்லி அளவு கொண்ட நெய் பாட்டில்கள் எந்தவித இடர்பாடுகளும் இன்றி கிடைக்கும் வகையில் அதன் உற்பத்தியை பெருக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களில் பால் விலைகளுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி பால் விற்பனையை அதிகரிக்க வேண்டும். எதிர்வரும் கோடை காலங்களில் ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் வகைகள், மில்க் ஷேக் குளிர்பான வகைகள், தயிர் மற்றும் மோர் ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்கவும், பொதுமக்களுக்கு தடையின்றி வழங்கவும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

Tags : Aa ,Christmas ,New Year ,Pongal ,Minister , Aa's special sweets will continue to be sold on the occasion of Christmas, New Year and Pongal: Minister informs
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!