×

சென்னை மாநகர பேருந்துகளில் ஒலிப்பெருக்கி மூலம் பேருந்து நிறுத்தம் அறிவிக்கும் திட்டம்: இன்று முதல் நடைமுறை

சென்னை: சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம்  அறிவிக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு முன்பாக 300 மீட்டர் தூரத்தில், நிறுத்தங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்ய போக்குவரத்துத்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி, நிறுத்தங்களின் பெயரை ஒலிபரப்பும் வகையில் சென்னை மாநகர பேருந்துகளின் உட்புறத்தில் ஜிபிஎஸ் உதவியுடன் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டு பகுதிகளில் தலா இரண்டு என ஆறு ஒலிபெருக்கிகள் பொருத்தப்படும்.

இதன்மூலம் பேருந்து செல்லும் வழித்தடத்தில் அடுத்தடுத்து வரும்  பேருந்து நிறுத்தங்களின் பெயரை குறிப்பிட்ட நிறுத்தத்தை அடைவதற்கு  300 மீட்டர் முன்பாக பயணிகளுக்கு தெரிவிக்கும் விதமாக அறிவிப்பு  செய்யப்படும். இந்த சேவை இன்று முதல் தொடங்கி வைக்கப்பட உள்ளது. சென்னை  பல்லவன் இல்லத்தில் இன்று நடைபெறும் நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆகியோர் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட  சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக  பேருந்துகளின் சேவையை தொடங்கி வைக்கின்றனர். மேலும் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகளின் இடையே விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டு போக்குவரத்து கழகத்திற்கு அதன் மூலம் வருவாய் திரட்டப்படும் எனவும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Loudspeaker ,Chennai , Loudspeaker bus stop announcement scheme in Chennai city buses: Implementation from today
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...