×

சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்தில் உரிமம் இல்லாத 86 கடைகளுக்கு சீல்: வருவாய்த்துறை நடவடிக்கை

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உரிமம் இல்லாமல், வாடகை செலுத்தாமல் இயங்கிய 86 கடைகளுக்கு சீல் வைத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் தொழில் செய்வதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். மேலும் அவர்கள் தொழில் வரியும் செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 2 முறை தொழில் வரியை நிறுவனங்கள், சிறு கடைக்காரர்கள் செலுத்த வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 70 ஆயிரம் கடைகள், தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பெட்டிக்கடை, டீக்கடை, காய்கறி கடை உள்ளிட்ட சிறு கடையாக செயல்படும் அனைத்து வியாபாரிகளும் தொழில் வரி கட்ட வேண்டியது அவசியம். சென்னை மாநகராட்சிக்கு தொழில் வரி மூலம் ஆண்டுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைக்கிறது. இதன்மூலம் மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தொழில் வரி வசூலை மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகிறார்கள். இது வரையில் தொழில் உரிமம் பெறாமல் உள்ளவர்கள், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக அதை செலுத்த வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்திற்குட்பட்ட பாரிமுனை, பூக்கடை, சவுகார்பேட்டை, மண்ணடி, சிந்தாதிரிப்பேட்டை, ஜி.பி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தொழில் உரிமம் மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகள் குறித்து, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் தொழில் உரிமம் மற்றும் வாடகை பாக்கி செலுத்தாமல் நடத்தப்படுவது தெரிந்தது. இதையடுத்து, ஒவ்வொரு பகுதியாக சென்று, மேற்கண்ட கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி, தொழில் உரிமம் மற்றும் வாடகை பாக்கியை செலுத்தும்படி தெரிவித்து வருகின்றனர்.

அதன்பேரில் சிலர் வாடகை பாக்கி மற்றும் தொழில் வரியை செலுத்தி வருகின்றனர். ஆனால், பலர் மாநகராட்சியின் இந்த உத்தரவை கண்டுகொள்ளாமல் கடை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை மாநகர கமிஷனர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், 5வது மண்டலத்திற்குட்பட்ட 55, 59 ஆகிய வார்டுகளில் உள்ள தங்க சாலை தெரு, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் தொழில் உரிமம் இல்லாமலும், வாடகை பாக்கி செலுத்தாமலும் செயல்பட்ட 70 கடைகளுக்கு, வருவாய் துறை அதிகாரிகள் 2வது முறையாக நோட்டீஸ் வழங்கினர். ஆனாலும், அவர்கள் இந்த அறிவிப்பை கண்டுகொள்ளாமல் கடை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி 5வது மண்டல வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று போலீசார் உதவியுடன் அந்த 70 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதேபோல், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கண்ணப்பர் திடல் பகுதியில் பல ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நடத்தப்படும் கடைகளில் 16 கடைகள் வாடகை செலுத்தாமல், ரூ.30 லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இதனை, வசூலிக்க வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும், அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்த காரணத்தால் நேற்று உதவி வருவாய்த்துறை அலுவலர் தலைமையில், போலீசார் உதவியுடன் மாநகராட்சி உரிமம் ஆய்வாளர்கள் மேற்கண்ட 16 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதுபோல், சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி தொழில் உரிமம் மற்றும் வாடகை பாக்கி செலுத்தாமல் நடத்தப்படும் கடைகள், தொழில் வழி செலுத்தாத கடைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், சவுகார்பேட்டை, கண்ணப்பத்திடல் ஆகிய பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

* படிவம்-இரண்டில்...
சென்னை மாநகரில் தொழில் நடத்துவோர் மற்றும் வருவாய் ஈட்டிடும் தனிநபர் ஆகியோர் தங்களது அரையாண்டு வருமானத்திற்கேற்ப அரையாண்டு தொழில்வரியினை பெருநகர  சென்னை மாநகராட்சி க்குச் செலுத்திட வேண்டும். வருவாய் ஈட்டுவோர் வருவாய் விவரங்களை படிவம்-2ல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களைப் பதிந்த பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியால் அவர்களுக்கு தனியே தொழில் வரியினை செலுத்தும் வசதிக்காக தனியே எண் ஒன்று வழங்கப்படும்.

Tags : Chennai Corporation Zone , 86 unlicensed shops sealed in Chennai Corporation Zone 5: Revenue action
× RELATED சென்னை மாநகராட்சி மண்டலம் 1,2,3,-ல்...