அரசினர் மேல்நிலை பள்ளியில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு: மாணவர்களுக்கு ஆலோசனை

பெரம்பூர்: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எம்கேபி நகர் போலீசார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, வியாசர்பாடி உதயசூரியன் நகரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். எம்கேபி நகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி பொறியாளர் அம்பேத்கர், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் சார்பில், டாக்டர் பக்தவச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பெண் குழந்தைகள் பொது இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். முன்பின் தெரியாத நபர்களிடம் எவ்வாறு பழக வேண்டும். செல்போன் பயன்பாட்டினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில், அம்பேத்கர் கலை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நாடகங்களை அமைத்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில், கலந்துகொண்ட அனைவரும் பெண் வன்கொடுமைக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டு, எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வியாசர்பாடி உதயசூரியன் நகர் பள்ளியில் இருந்து பேரணியாக எம்கேபி நகரின் பல பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Related Stories: