ராஜா அண்ணாமலைபுரத்தில் நடிகரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் இளங்கோ குமரவேல் (57). நடிகரான இவர், அபியும் நானும், வெள்ளித்திரை, பயணம், மொழி, வாகை சூடவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைக்கதை ஆசிரியரான இவர், அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று திரைப்படத்தின் திரைக்கதை எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து பட்டினப்பாக்கம் நோக்கி தனது செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், இளங்கோ குமரவேலிடம் முகவரி கேட்பது போல் நடித்து, அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.

இதுகுறித்து நடிகர் இளங்கோ குமரவேல் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறி கொள்ளையர்களான திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தை சேர்ந்த யுவன் (21), பிரசாத் (22) ஆகியோர் செல்போன் பறித்து சென்றது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related Stories: