145* ரன் விளாசினார் லாதம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி

ஆக்லாந்து: இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், கேப்டன் வில்லியம்சன் - டாம் லாதம் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில்  அபாரமாக வென்றது. ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் முதல் முறையாக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினர். கேப்டன் தவான், கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 23 ஓவரில் 124 ரன் சேர்த்தனர்.

கில் 50 ரன் (65 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), தவான் 72 ரன் (77 பந்து, 13 பவுண்டரி) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பன்ட் 15, சூரியகுமார் 4 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஷ்ரேயாஸ் - சஞ்சு சாம்சன் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்தது. சாம்சன் 36 ரன் (38 பந்து, 4 பவுண்டரி) எடுத்து மில்ன் பந்துவீச்சில் பிலிப்ஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியில் இறங்க, இந்திய ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஷ்ரேயாஸ் 80 ரன் (76 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி சவுத்தீ பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி பந்தில் ஷர்துல் தாகூர் (1 ரன்) அவுட்டாக, இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன் குவித்தது. வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னுடன் (16 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. தரப்பில் சவுத்தீ, பெர்குசன் தலா 3 விக்கெட், ஆடம் மில்ன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள்  ஃபின்  ஆலன் 22 ரன், கான்வே 24 ரன்னில் வெளியேற. டேரில் மிட்செல் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். நியூசி. 19.5 ஓவரில் 88 ரன்னுக்கு 3விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் வில்லியம்சன் - டாம் லாதம் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் விழி பிதுங்கினர். வாஷிங்டன் மட்டும் சிக்கனமாகப் பந்துவீசி ஆறுதல் அளித்தார். ஷர்துக் வீசிய 40வது ஒவரில் தொடர்ந்து 4 பவுண்டரி, ஒரு சிக்சர், வைடுகள் என 25 ரன் சேர்த்தார் லாதம். கூடவே 76 பந்தில் சதத்தையும் எட்டினார்.

அதன் பிறகு டாப் கியரில் எகிறிய அவர் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட நியூசிலாந்து 47.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்து அபாரமாக வென்றது. வில்லியம்சன் 94* ரன் (98 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), லாதம் 145 ரன்னுடன் (104 பந்து, 19 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் அறிமுக வேகம் உம்ரான் 2 விக்கெட் (10-0-66-2), ஷர்துல் ஒரு விக்கெட் எடுத்தனர். வாஷிங்டன் 10 ஓவரில் 42 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக லாதம் தேர்வு செய்யப்பட்டார். நியூசி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி ஹாமில்டனில் நாளை நடக்கிறது.

* இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் ஆட்டங்களில் அதிக ரன் (145) குவித்த நியூசி. வீரர் என்ற பெருமையை லாதம் பெற்றார்.

* 2019ல் இருந்து சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் போட்டியில் கூட தோற்றதில்லை என்ற சாதனையை நியூசி. நேற்றும் தக்கவைத்தது (தொடர்ச்சியாக 13 வெற்றி). இதற்கு முன் 2015ல் தொடர்ந்து 12 ஆட்டங்களில் வென்றதே நியூசி.யின் சாதனையாக இருந்தது.

* இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டங்களில் 2வது முறையாக நியூசி. 300 ரன்னுக்கு மேல் விரட்டி வென்றுள்ளது. இதற்கு முன் 2020ல் ஹாமில்டனில் நடந்த ஆட்டத்தில் 348 ரன் எடுத்து வென்றது.

Related Stories: