×

3 வண்ணங்களில் சரிபார்ப்பு குறியீடு: டிச. 2 முதல் டிவிட்டர் அறிமுகம்

சான்பிரான்சிஸ்கோ: டிவிட்டரில் இனி வெவ்வேறு நிறங்களில் சரிபார்ப்பு குறியீடுகள் வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பிரபலமான சமூக ஊடகமான டிவிட்டரை எலான் மஸ்க் சமீபத்தில் விலைக்கு வாங்கினார். இதையடுத்து டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கை பிரதிபலிக்கும் நீலநிற குறியீடு (ப்ளூ டிக்) முறைக்கு மாதம் 8 டாலர்கள் செலுத்த வேண்டும் என்பது போன்ற புதிய திட்டங்களை அமல்படுத்தினார். கட்டணம் செலுத்தும் இந்த திட்டம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், எலான் மஸ்க், நேற்று டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கான குறியீட்டை டிசம்பர் 2ம் தேதி டிவிட்டர் அறிமுகப்படுத்தும். கணக்குகளை வேறுபடுத்தும் வகையில் வெவ்வேறு நிறங்களில் சரிபார்க்கப்பட்ட குறியீடு வழங்கப்படும். நிறுவனங்களுக்கு பொன் நிறம், அரசாங்க கணக்குகளுக்கு சாம்பல்  நிறம், தனிநபர்களுக்கு அவர்கள் பிரபலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீல  நிற குறியீடு வழங்கப்படும். இது வேதனையாக இருக்கலாம், ஆனால், இது அவசியமானது,’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ‘சரிபார்க்கப்பட்ட அனைத்து தனிப்பட்ட நபர்களும் ஒரே ப்ளூ டிக்-ஐ கொண்டிருப்பார்கள். ஒருவேளை தனிநபர்கள் அந்த அமைப்பால் சரிபார்க்கப்பட்டால், அவர்கள் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டும் 2வது சிறிய சின்னத்தை கொண்டிருப்பார்கள். சரிபார்க்கப்பட்ட குறியீடுகள் தொடர்பான சந்தேகங்களுக்கு அடுத்த வாரம் விளக்கம் அளிக்கப்படும்,’ என்று கூறியுள்ளார்.


Tags : Twitter , Verification code in 3 colors: Dec. 2 First introduction to Twitter
× RELATED இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா...