×

மேற்கு வங்க அரசியல் எதிரிகள் மம்தா - சுவேந்து திடீர் சந்திப்பு: தேசிய அளவில் பெரும் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பரம எதிரிகளாக உள்ள முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜ.வை சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியும் நேற்று திடீரென சந்தித்து பேசினர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் பலம் வாய்ந்த மூத்த  தலைவராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. கருத்து வேறுபாடு காரணமாக, 2020ம் ஆண்டில் பாஜ.வில் இணைந்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தாவையும் தோற்கடித்தார்.

தற்போது, இவர் பாஜ.வின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். மாநில அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இவரை அழைக்காமல் மம்தா அவமதித்து வந்தார். இந்நிலையில், அரசியல் சாசன  தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கான அழைப்பிதழில் சுவேந்துவின் பெயர் சேர்க்கப்படவில்லைஇதனா்ல், அரசியல் சாசன தின நிகழ்ச்சிகளை புறக்கணிக்கப் போவதாக சுேவந்து அறிவித்தார். இப்படிப்பட்ட நிலையில், நேற்று பேரவை கூட்டத்தின் மதிய இடைவேளையின் போது, சுவேந்துவை  மம்தா திடீரென தேநீர் அருந்த தனது அறைக்கு அழைத்தார்.

இதையடுத்து, மம்தாவின் அறைக்கு சென்று சுவேந்து அவரை சந்தித்து  பேசினார். இந்த சந்திப்பு, தேசிய  அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த சுவேந்து, ‘இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அதற்கு புதிய அர்த்தங்களை கர்ப்பிக்க வேண்டாம். மம்தா கொடுத்த தேநீரை நான் குடிக்கவில்லை,’ என்றார். பின்னர், சட்டப்பேரவை நிகழ்ச்சியில் மம்தா பேசியபோது, ‘ஒரு காலத்தில் சுவேந்துவை எனது சகோதரராகவே நினைத்து வந்தேன்,’ என தெரிவித்தார். இது,அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை அதிகமாக்கி இருக்கிறது.

* பாஜ - திரிணாமுல் கூட்டணி காங்., கம்யூ. கட்சிகள் கருத்து
மம்தா - சுவேந்து சந்திப்பு குறித்து மேற்கு வங்க காங்கிரஸ் மூத்த தலைவர் கமுர்சன் சவுத்ரி கூறுகையில், ‘மம்தா கேட்டதுமே கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியை நேற்று (நேற்று முன்தினம்)  ஒன்றிய அரசு அளித்தது. டிசம்பர் 5ம் தேதி மோடியை டெல்லியில் மம்தா சந்தித்து பேசுகிறார். இன்று, சுவேந்துவை அழைத்து பேசியுள்ளார். 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான திதி (மம்தா), மோடியின் ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பதையே இந்த சந்திப்பு காட்டுகிறது,’ என தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுஜன் சக்கரவர்த்தி கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலில் பாஜ - திரிணாமுல் இடையே கூட்டணி ஏற்படப் போவதை, இன்றைய சந்திப்புஉறுதிப்படுத்தி இருக்கிறது,’ என்றார்.

Tags : West Bengal ,Mamata ,Suvendu , West Bengal Political Rivals Mamata - Suvendu Sudden Meeting: National Panic
× RELATED மக்களவை தேர்தலுக்கு பின்னர்...