திருப்பதியில் டிசம்பர் மாதத்துக்கான அங்கபிரதட்சண டிக்கெட் மூன்றே நிமிடத்தில் முடிந்தது

திருமலை: திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான அங்கபிரதட்சண இலவச டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 3 நிமிடத்தில் முடிந்துவிட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான அங்கபிரதட்சண இலவச டிக்கெட் நேற்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து மொத்தம் 25 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்கள் என 25 ஆயிரம் இலவச அங்கபிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட 3 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளையும் பக்தர்கள் பதிவு செய்து விட்டனர். மேலும், நேற்று காலை நிலவரப்படி திருப்பதி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 7 அறைகள் பக்தர்களால் நிரம்பி இருந்தது. இதனால், பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் 66 ஆயிரத்து 72 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதில், ரூ.4.23 கோடி காணிக்கையாக கிடைத்தது.

Related Stories: