மறைக்கப்பட்ட வரலாறுகள் கடந்த கால தவறுகளை இந்தியா திருத்துகிறது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: கடந்த கால தவறுகளை இந்தியா திருத்தி வருவதாகவும், மாவீரர்கள் கொண்டாடப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் அகோம் அரசின் புகழ் பெற்ற ராணுவ தளபதி லச்சித் புர்கானின் 400வது பிறந்த நாள் விழா நிறைவு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது; இந்தியாவின் வரலாறு அடிமைத்தனத்தை பற்றியது மட்டுமல்ல. அதன் போர் வீரர்களையும் உள்ளடக்கியது. இந்தியாவின் வரலாறு என்பது போர் வீரர்களின் வரலாறு, வெற்றியின் வரலாறு, தியாகம், தன்னலமற்ற தன்மை மற்றும் வீரத்தின் வரலாறாகும். துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்கு பின், ஆங்கிலேயர் காலத்தில் சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட வரலாறு தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின் அடிமைத்தனத்தின் நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டிய அவசியம் இருந்தது.

ஆனால், அது நடக்கவில்லை. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் துணிச்சலான மகன்கள், மகள்கள் அடக்குமுறையாளர்களுடன் போராடினார்கள். ஆனால், இந்த வரலாறு வேண்டுமென்றே மறைக்கப்பட்டது. இன்று இந்தியா காலனித்துவ தடைகளை உடைத்து முன்னேறி, நமது பாரம்பரியத்தை கொண்டாடி, நமது வீரர்களை பெருமையுடன் நினைவு கூர்கிறது. இதன் மூலமாக, தனது கடந்த கால தவறுகளை இந்தியா திருத்திக் கொள்கிறது. லச்சித் புர்கானின் வாழ்க்கை அவரது பரம்பரையை தாண்டி, நம்மை நாட்டை குறித்து சிந்திக்க தூண்டுகிறது. அவர் உறவுகளை காட்டிலும் தேசிய நலனுக்காக பாடுபட்டார்,  நாட்டை விட எந்த உறவும் பெரிதல்ல என்று அவர் கூறி இருந்தார். இவ்வாறு அவர் பேசினார்.

டிரோன் பறக்கவிட்ட 3 பேர் கைது: குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லா கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதனால், அப்பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இருப்பினும், கேமரா பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலமாக பொதுமக்களின் கூட்டத்தை சிலர் படம் பிடித்தனர். அந்த டிரோன்களை போலீசார் செயலிழக்க செய்தனர். மேலும், தடையை மீறி டிரோன்களை பறக்க விட்டதாக 3 பேர் ைகது செய்யப்பட்டனர்.

Related Stories: