×

கடலில் வீணாக கலக்கும் தாமிரபரணி தண்ணீரை குலசை தருவைகுளத்திற்கு திருப்பி விட வேண்டும்; உடன்குடி விவசாயிகள் கோரிக்கை

உடன்குடி: கடலில் வீணாக கலக்கும் தாமிரபரணி தண்ணீரை குலசை தருவைகுளத்திற்கு திருப்பி விட வேண்டும் என்று உடன்குடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உடன்குடி பகுதி விவசாயிகள் சங்கம் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்பி, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் தெற்கு பிரதான கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் கடலில் பாதி கடம்பா என்று பெயர் பெற்ற கடம்பாகுளத்தின் கீழுள்ள 13 பாசன குளங்களில் கடைசி குளமான திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன் குளத்தின் உபரிநீர் தவிர ஏனைய பிற குளங்களின் உபரிநீர் முழுவதும் திருச்செந்தூர் கடலில் தான் கலக்கிறது.

இவற்றில் ஆவுடையார்குளம் கால்வாய் மற்றும் ஏனைய பிற குளங்களின் உபரிநீர் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் கல்லூரி வழியாக கடலுக்கு காந்திபுரம் கால்வாய் வழியாக செல்கிறது. இவற்றிற்கு இடைப்பட்ட தூரம் சுமார் 500 மீட்டர் மட்டுமே தான். எனவே இந்த இரு கால்வாய்களையும் இணைத்தால் காந்திபுரம் கால்வாய் வழியாக வீணாக கடலுக்கு போகும் பெருமளவு தண்ணீரை மிச்சப்படுத்தி திருச்செந்தூர் ஆவுடையார்குளத்திற்கு அனுப்பி சேமிக்கமுடியும். இதனால் குலசை தருவைக்குளத்திற்கு உபரிநீர் வழங்கும் நா.முத்தையாபுரம் எல்லப்பநாயக்கன்குளம் கூடுதல் தண்ணீர் பெறும். 12 குளங்களின் மூலம் ஏராளமான கனஅடி நீர் வீணாக கடலுக்கு போவதால் அதை பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம்.

குலசை தருவைக்குளத்தை நிரந்தர நீர் பெறும் குளங்கள் பட்டியலில் இணைத்தால், ஆயிரக்கணக்கான ஏக்கர் தாழ்வான உவர் நில நீர்ப்பிடிப்பு பகுதியில் சேமித்தால் நிலத்தடி நீர் உப்பாக மாறியுள்ள உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீரின் தன்மை மாறும். குலசேகரன்பட்டிணம் தருவைகுளம் மறுகால் பாய்ந்து கருமேனி ஆற்றின் வழியாக மணப்பாடு கடலில் எவ்வித இடையூறுமின்றி கலக்கும். இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamiraparani water that is wasted in the sea should be diverted to Kulasai Daruvaikulam; The demand of fellow farmers
× RELATED மதுரையில் இளைஞர் வெட்டிக் கொலை..!!