உடுமலை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை; அதிகாரிகள் ஆய்வு

உடுமலை: உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகராட்சி தலைவர் தலைமையில் ஆய்வு செய்தனர். கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை நகரம் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், உடுமலை ஆர்.டி.ஓ., தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் நிறுத்தங்களை மாற்றம் செய்வது குறித்து கூட்டாய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தளிரோடு கச்சேரி வீதி பேருந்து நிறுத்தம் மற்றும் தளிரோடு யூனியன் அலுவலகம் முன்புறம் உள்ள பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் உடுமலை நகராட்சி தலைவர் மத்தின் தலைமையில் நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் முன்னிலையில், நகராட்சி பொறியாளர், நகரமைப்பு அலுவலர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

   

இதையடுத்து கச்சேரி வீதி சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தம் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக அரசு மேல்நிலை பள்ளி அருகிலும், யூனியன் அலுவலகம் முன்புறம் உள்ள பஸ் நிறுத்தம் தெற்கு நோக்கி செல்லும் பஸ்கள் நின்று செல்லும் வகையில் எஸ்.என்.ஆர். நகர் எதிரிலும் வடக்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் காமாட்சி அம்மன் கோயில் வழியாக செல்ல போக்குவரத்து மாற்றப்பட உள்ளது. இப்பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் நெடுஞ்சாலை துறையால் ராஜேந்திரா சாலையில் பழனி சாலை சந்திப்பில் இருந்து அண்ணா பூங்கா வரை முதல் கட்டமாகவும், அண்ணா பூங்கா முதல் ரயில் நிலையம் வரை இரண்டாம் கட்டமாகவும் தடுப்புகள் அமைக்கும் பணி அடுத்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: