×

டெல்லி மாநகராட்சி தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியிட தடை

புதுடெல்லி: தலைநகர் டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் வரும்  டிசம்பர் 4ம் தேதியும், டிசம்பர் 7ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 181  வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி 48 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களில்  வெற்றி பெற்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வரும் டிசம்பர் 4ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை ஒளிபரப்பப்படாது.

அதேபோல் எவ்வித கருத்துக் கணிப்பையும் ஊடகங்கள் நடத்தக் கூடாது’ என்று தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 12ம் தேதி இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுற்ற நிலையில், வரும் டிச. 8ம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதனால், அங்கும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுக்கு தடை விதிக்கப்படுகிறது. குஜராத் சட்டசபை தேர்தல் வரும் டிச. 1, 5ம் தேதியில் நடைபெறுவதால், அதன் முடிவுகளும் டிச. 8ம் தேதி வெளியாகிறது. அதனால், குஜராத் தேர்தல் முடியும் வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Delhi Corporation , Ban on publication of Delhi Corporation polls
× RELATED டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டை...