வீரசிவாஜி குறித்து சர்ச்சை கருத்து கூறிய ஆளுநரை முதியோர் இல்லத்தில் சேருங்கள்!; மாஜி முதல்வர் உத்தவ் தாக்கரே காட்டம்

மும்பை: வீர சிவாஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை முதியோர் இல்லத்தில் சேருங்கள் என்று முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே காட்டத்துடன் கூறினார். மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கடந்த சில நாட்களுக்கு முன் மராத்தி மக்களின் அடையாளமான வீர சிவாஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அதையடுத்து அவரது பேச்சு மகாராஷ்டிரா அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாத தலைவர் சரத் பவார், ‘ஆளுநர் கோஷ்யாரி தனது அதிகார வரம்புகளை மீறிவிட்டார்’ என்றார்.

தொடர்ந்து சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், ‘பகத்சிங் கோஷ்யாரியை நான் ஆளுநராக பார்க்கவில்லை. முன்பு அவர் மராத்தியர்களை அவமதித்தார்; தற்போது வீர சிவாஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இதன் பின்னணியில் யாருடைய மூளை இருக்கிறது? இவர்கள் மகாராஷ்டிரா என்ற அடையாளத்துடன் விளையாடி வருகின்றனர். ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும். அவரை முதியோர் இல்லத்தில் கொண்டு விட வேண்டும். ஆளுநரை ஒன்றிய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஒருசில நாட்கள் மட்டுமே காத்திருப்போம். எங்களது கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

Related Stories: